பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழ் நாவல்

போடும்படி தந்து விடுகிறார்கள். மற்றவர்கள் அவ்வப்போது எழுதியே தருகிறார்கள்.

எப்படியானாலும் இந்தப் பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வெளி வந்த நாவல்களில் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு தொடர்கதைகளாகவே வந்தவை. டாக்டர் முவ. போன்றவர்கள் இதற்கு விலக்கு. அவரைப் போன்ற மிகச் சிலரே நாவலைத் தனியே எழுதி முடிக்கிறார்கள்.

கல்கி காட்டிய வழியைப் பின்பற்றிச் சரித்திர நாவல்களை எழுதும் எழுத்தாளர்கள் பலர் இப்போது வந்து விட்டார்கள். எவலோரும் ஒரே தரத்தில் சரித்திரத்தை நிலைக்களமாகக்கொண்டு எழுதுகிறார்கள் என்று சொல்ல இயலாது. சரித்திரத்தில் வரும் ஆட்களின் பெயர் களையும், ஊர்களின் பெயர்களையும் அங்கங்கே தெளித்து எழுதிவிட்டால் மட்டும் சரித்திரக் கதை ஆக முடியாது.

குடும்பத்தைப்பற்றிய நாவல்களும் சமுதாயத்தைப் பற்றிய நாவல்களும் பல வந்திருக்கின்றன. அவை எல்லாவற்றையும் தனித்தனியே எடுத்து ஆராய்வதற்கு இடமும் போதாது; நேரமும் இல்லை. அன்றியும், அவற்றின் மதிப்பை இப்போது எடை போடுவதைவிட இன்னும் பல காலம் கடந்து போட்டால் ஓரளவு நடு நிலையோடு கண்காணிக்க முடியும்.

ஆகவே, ஆரம்ப காலத்தில் தோன்றிய சில நாவல்களையும், அமரர் கல்கியின் நாவல்களிற் சிலவற்றையும் பற்றி இனி ஆராயலாமென்று நினைக்கிறேன்.