பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. பொது வரலாறு

45

வதிலும், அதைப்பற்றிப் பேசுவதிலும் ஊக்கம் இருக்கும். ஒரு சமயம் பெரும் புயல் வீசுகிறது. அதற்கப்புறம் எங்கும் ஒரு வாரம் அதே பேச்சாக இருக்கும். அதைப் பற்றிய விவரங்களை ஆவலோடு மக்கள் கேட்பார்கள். நாளாகி விட்டால் அதில் உள்ள சுவை போய்விடும். இவ்வாறு உண்மையிலே ஒரு சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சியை எப்படியாவது அந்த வாரம் வரும் தொடர்கதையில் நுழைத்துவிட வேண்டும் என்ற ஆசை ஆசிரியருக்குத் தோன்றலாம். அதனால் அப்பொழுதைக்கு வாசகர்களுக்கு. ஒரு சிரத்தை (Topical interest) ஏற்படலாம். அந்த வாரத்தில் வந்த தொடர்கதைப் பகுதியில் தீ விபத்தோ, வெள்ளச் சேதமோ இவ்வாறு இடம் பெறுமானால் வாசகர்கள் ஓ ஓ என்று அப்போது பாராட்டுவார்கள். ஆனால் தொடர்கதை முடிவு பெற்று முழு உருவத்தோடு நிற்கும் போது இத்தகைய பகுதிகள் கதையின் ஓட்டத்தோடு இணைந்து இழைந்து பொருந்தி ஓடாமல் தனித் தனியே பிதுங்கி நிற்பன போலத் தோன்றும்.

எல்லாத் தொடர்கதைகளிலும் இத்தகைய குறைகள் சில இருப்பது இயல்பு. ஆனால் கல்கி எழுதிய தொடர் கதைகளில் இவ்வாறு அமைந்த பகுதிகள் குறைவு.

கல்கியின் சரித்திர சமூக நாவல்களைப்பற்றித் தனியே பேசுவதாக இருப்பதால் இந்த அளவோடு கல்கியின் தொடர்கதைகளைப்பற்றிச் சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன். கல்கியைப் போலவே தொடர் கதைகளாக எழுதிவரும் நாவலாசிரியர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். அமரர் தேவன் அவ்வாறு பலவற்றை எழுதினார். கா. சி. வேங்கடரமணியும், எஸ். வி. வி யும் ஆங்கிலம், தமிழ் என்னும் இரண்டு மொழிகளிலும் எழுதினார்கள். நேரமும் பொறுமையும் உள்ள சிலர் நாவல் முழுவதையுமே எழுதித் தொடர்கதையாகப்