15
நாலடியாருந் திருக்குறளும் பௌத்த நூல்களா என்னும் ஐயம் ஈங்குள்ள சிலர்க்குப் பிறக்கலாம். சமணமும் பௌத்தமும் அறத்தில் பெரிதும் வேறுபடுவனவல்ல. மிகச் சிறு வேறுபாடுகளே யுண்டு. அவ்வேற்றுமைகளை ஈண்டுக் கருதல் அநாவசியம். உயிரைப்பற்றி இருசாரார்க்கும் அடிப்படையான வேற்றுமையுண்டு. சமணர் உயி ருண்மையை வலியுறுத்துவர்; பௌத்தர் அதை மறுப்பர்.
திருவள்ளுவர் சமயம்
நாலடியார் சமண நூலென எல்லாரும் ஏற்றுக் கொள்கிறார். திருக்குறளை ஒவ்வொரு சமயத்தாருந் தத்தஞ் சமய நூல் என்று செப்புகிறார். எனது சிற்றாராய்ச்சியில் திருக்குறள், சமண அறத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த பொது நூல் என்று விளங்கியிருக்கிறது. புத்தர் பெருமான் அருளறம் திருக்குறளில் யாண்டுங் கமழ்ந்து கொண்டிருத்தலே ஈண்டுக் கருதற்பாலது. அறத்தில் சமண பௌத்த சமயங்களில் எவ்வித மயக்கமும் எவருங் கொள்ளவேண்டுவதில்லை.
இனி ஐம்பெருங் காப்பியங்களை எடுத்துக்கொள்வோம். இவைகளை ஈங்குக் கால முறைபற்றிக் கொள்ளவில்லை; வழக்கு முறைபற்றியே கொள்கிறேன்.
சிந்தாமணி
சிந்தாமணி சமண நூல் என்பது எவரும் அறிந்த தொன்று. ஆனால், அந்நூற்கண் பௌத்த அறங்கள் இடம் பெறாமலில்லை. அதன்கண் போந்துள்ள அறங்கள் யாவும் பௌத்தத்துக்கு அரண் செய்வனவேயாகும். சமண அறங்களில் பௌத்த அறங்களும் ஒன்றிவிடும்.
சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரண்டு நூல்களின் நினைவு தோன்றும்போதே எனது உள்ளம் இன்பக் கடலாடுகிறது. அவ்விரண்டு நூல்களையும் ஈன்ற தமிழ்நாட்டை மீண்டுங் காணவேண்டுமென்பது எனது தணியாக் காதல்.