16
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தைச் சமண நூல் என்று ஆராய்ச்சிக்காரர் பலர் கூறுப. மணிமேகலை யென்னும் நூல் சிலப்பதிகாரத்தோடு பெரிதுந் தொடர்புடை
யது. மணிமேகலை பௌத்த நூல் என்பது வெள்ளிடைமலை. இதனால் சிலப்பதிகாரத்தையும் பௌத்த நூலெனக் கூறுவது பொருத்தமெனச் சில அறிஞர் கருதுகிறார். சிலப்பதிகாரம் சமண நூலாயினுமாக; பௌத்த நூலாயினுமாக. அதன்கண் புத்தர் பெருமான் அருளறம் முற்றும் மலிந்து கிடக்கிறது. பௌத்த தர்மமே சிலப்பதிகாரமென்னும் நாடகத் தமிழ் நூலாக உருக்கொண்டதென்று நான் கூறுவேன். புத்தர் பெருமான் உலகிற் கறிவுறுத்திய அறம் சிலப்பதிகாரத்தில் எவ்விடத்தில் பொலியாமலில்லை? கண்ணகியும் கோவலனும் சோழநாடு விடுத்துப் பாண்டி நாடு நோக்கி நடந்த வழிகளையுஞ் சோலைகளையும் காடுகளையும் வருணிக்கப் புகுந்த இளங்கோ அடிகள், அவைகளெல்லாவற்றையும் புத்தர் பெருமான் தர்மமயமாக்கிவிட்டனர். வழிநடை வருணனையிலும் சிலப்பதிகாரத்தில் பௌத்த அறங்கள் ஒழுகி வழிகின்றனவெனில், மற்றப் பகுதிகளின் அறநிலைகளை அடுக்கி அடுக்கிக் கூறவும் வேண்டுமா?
மணிமேகலை
மணிமேகலை யெனும் அறநிலையத்தை அணுகுவோம். மணிமேகலை அறநிலையமே, மணிமேகலைச் சொல்லெலாம் அறம்; பொருளெலாம் அறம். மணிமேகலையின் நாடெலாம் அறம்; காடெலாம் அறம். புத்தர் பெருமானைத் தமிழிற்காட்டும் ஒரு மணி நிலையம் மணிமேகலை என்று மொழிகிறேன்.
பௌத்தமும் பூதவாதமும்
மணிமேகலையில் சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை யென்றொன்றுண்டு. அதன்கண் அந்நாளில் தமிழ் நாட்டில் நிலவிய சமயங்களெல்லாம் மிளிர்கின்றன. அவைகளைக் குறித்து எனது கருத்தை ஈண்டு வெளியிடவேண்டுவது அவசியமென்று
தோன்றவில்லை. ஆனால் பௌத்தத்துக்கும் பூதவாதமெனும் உலகாயதத்துக்கும் வேற்றுமையுண்டா