பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழ் நூல்களில் பௌத்தம்

வாதவூரடிகள் பௌத்த மதத்தைச் சிலவிடங்களில் தாக்கியிருத்தல் உண்மை. அத்தாக்குதல் கண்டு பின்னே வந்தவர்கள் பலவிதமாகப் புராணங்கள் எழுதியிருத்தல் வேண்டுமென்று நான் ஊகிக்கிறேன்.
கழு வேற்றிய கதை
திருஞானசம்பந்த சுவாமிகள் சமணர்களைக் கழு வேற்றிய கதையும் இத்தன்மைத்தே. திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்பதற்குப் போதிய அகச்சான்றில்லை. அகச்சான்று கிடைத்தாலன்றி அவ் வரலாற்றை யான் சரித்திர அமைப்பு முறையில் கொள்ளேன். பின்னே எழுதப்பெற்ற புராணங்களைக் கொண்டு பலவாறு பிதற்றல் அறிவுடைமையாகாது. புராணங்களில் பல திரிபுகள் உண்டு என்பதைக் கவனித்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக இரண்டொன்று குறிக்கிறேன்.
புராணப் புரட்டு
சங்க இலக்கியங்கள் ஆர்க்காடு என்று சாற்றியிருப்பதைப் புராணங்கள் ஆறுகாடு என்று கொண்டு, ஆறு முனிவர்கள் தவங்கிடந்ததாகக் கதைகட்டி யிருக்கின்றன. ஆர்க்காடு எனில் ஆத்திமரம் நிரம்பிய காடு என்பது பொருள். அப்பர் சுவாமிகள் "சிங்கமே" என்று இறைவனை விளித்துப் பாடி யிருத்தலைக் கண்ட, பின் வந்த பௌராணிகர்கள் "அப்பர் சுவாமிகளை ஆண்டவன் சிங்கமாக விழுங்கினான்" என்று எழுதி வைத்தார்கள். அவ்வெழுத்தை ஆதாரமாகக் கொண்டு சிலர் ஓவியம் வரைந்திருக்கிறார்; சிலர் பாடல் பாடியிருக்கிறார்; சிலர் திருவிழா நடாத்துகிறார். ஏறக்குறைய போக்குவரவுச் சாதனங்கள் பெருகியுள்ள இந்நாளிலேயே பத்திரிகையுலகில் எவ்வளவு திரிபுகளைக் காண்கிறோம்! போதிய சாதனங்களில்லா அந்நாளில் நிகழ்ச்சி முறைகள் திரிபுபடுதல் இயல்பே. அத்திரிபுகளை நம்புவோர் நம்புக. ஆராய்ச்சியுலகம் அவைகளைப் பொருளாக்கொண்டு இடர்ப்படலாகாதென்பதை ஈண்டு வலியுறுத்துகிறேன்.