பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமுறைகள்

23

ஞான சூரியன்
இப்பொழுது "ஞானசூரியன்" என்றொரு நூல் தமிழ் நாட்டில் உலவுகிறது. அதன் ஆசிரியரை யான் அறிவேன். அந்நூற்கண் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றியதைப் பற்றிய குறிப்புப் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவ் விடத்தில்,

"அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத்திரு வுள்ளமே
"

என்னுந் தேவாரத்திலுள்ள "திறங்கள்" என்னுஞ் சொல் "சிரங்கள்" என்று மாற்றப்பட்டிருத்தல் கண்டேன். இளமையில் நான் மனப்பாடஞ் செய்தது தவறோ என்று ஐயுற்று என்னிடமுள்ள மூன்று பிரதிகளைத் திறந்து பார்த்தேன். அவைகளில் "திறங்கள்" என்ற சொல்லே மிளிர்கிறது. வேறிடங்களிலுள்ள ஏடுகளையும் பார்த்தேன். அவைகளிலும் "திறங்கள்" என்ற சொல்லே காட்சியளிக்கிறது. மணிமேகலையில் "சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதை" என்றொன்றிருக்கிறது. இதனால் சமயச்சார்பில் "திறம்" என்னுஞ் சொல்லாட்சி அற்றைநாளி லிருந்ததாகத் தெரிகிறது.

பின்னே நூலாசிரியரை நேரே கண்டு கேட்டல் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஒருநாள் வழக்கம்போல அந்நூலாசிரியர் கவளி கமண்டலத்துடன் எனது நிலையம் போந்தார். அன்று அவர் கவளியில் தேவாரத் திருமுறை இருந்தது தான் வியப்பு. "இஃதென்ன நூல்" என்று கேட்டேன். "தேவாரம்" என்றார். உடனே அத்தேவாரத்தை வாங்கி இப்பதிப்பிலிருப்பது திறமா சிரமா என்று மிக விரைவுடன் பார்த்தேன். அதன் கண்ணும் திறமென்றே இருத்தல் கண்டேன். அது கண்டு, "சுவாமிகளே! 'ஞானசூரியனில் திறம், சிரமாக மாற்றப்பட்டதன் நோக்கம் என்னை?"