பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிற்பட்ட நூல்கள்

29

பௌத்தமும் ஹிந்து மதமும்

சகோதரிகளே! சகோதரர்களே! இன்னும் உங்கள் அரிய காலத்தைக் கொள்ளையிட விரும்புகிறேனில்லை. இப்பொழுது உலகம் சமரசத்தை விரும்புகிறது. அச்சமரசத்துக்குப் பௌத்தத்தின் துணை இன்றியமையாதது. பெளத்த தர்மம் எச்சமயத்திலில்லை? எல்லாச் சமயங்களிலும் அது நுழைந்திருக்கிறது.
சிராத்தம்
ஹிந்து மதத்தில் பௌத்த தர்மங்கள் பல நுழைக்திருக்கின்றன. சிராத்த காலங்களில் கன்றுக்கால்கள் முள்ளம்பன்றி முதலியன பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பொழுது அவைகளிடத்தில் வாழைத்தண்டு பலாக்காய் முதலியன புகுந்திருக்கின்றன. இம்மாற்றத்துக்குக் காரணம் யாது? பௌத்த தர்மமேயாகும்.
கோயில்கள்
சைவம் வைணவம் என்னும் மதங்களின் சார்பாகப் பின்னாளில் அமைந்துள்ள கோயில்கள் முதலியனவும் பௌத்தத்தினின்றும் அரும்பின என்று ஆராய்ச்சிக்காரர் கூறுகிறார். ஈண்டுத் தலைமை வகித்துள்ள பெரியார் இற்றைக்கு இருபத்தைந்தாண்டுகட்கு முன்னர் இராயப்பேட்டையில் நிகழ்த்திய சொற்பொழிவொன்றில், "அரங்கநாதர் புத்தரே" என்று விளக்கிக் காட்டினார். அப்பொழுது யானும் அச்சொற்பொழிவைச் செவிமடுத்தேன். சைவ வைணவாலயங்களின் பிற்கால அமைப்பு, புத்தருக்கு முன்னர் இருந்ததென்று தெரியவில்லை. வேத காலத்தில் தற்போதைய ஆலய வழிபாடில்லை என்பது வெள்ளிடைமலை.
சிவபிரான் கோயில்களின் விழாக்களை உற்றுநோக்கி ஆய்ந்தால், புத்தர் வாழ்வு செவ்விதிற் புலனாகும். சென்ற திங்கள் திருமயிலையில் கபாலீச்சுரத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்றது. அதில் தேர்விழா முதலியன நடைபெற்றபின்னைப் பிச்சாண்டி சேவை யென்றொன்று நடைபெறுகிறது. அஃது அறிவுறுத்துவதென்னை?