30
கௌதமர் அரச வாழ்வு நீத்து நிர்வாணநிலை யெய்தியதை யன்றோ அறிவுறுத்துகிறது? பிச்சாண்டி சேவைக்கு முந்திய சேவைகள் புத்தர் பெருமானின் முன்னைய அரச நிலையை அறிவிப்பன. பிச்சாண்டி சேவை அவரது பின்னைய அறநிலையைத் தெரிப்பது. இவ்வாறு பௌத்தம் பல துறைகளிலும் ஹிந்து மதத்தில் நுழைந்திருக்கிறது.
மகாத்மா காந்தி
ஆனால் ஹிந்து மதத்தில் நுழைந்த அறநுட்பங்கள் பல இந்நாளில் போலியாய்விட்டன. எனவே, மீண்டும் பழம் பௌத்த தர்மந் தேவையென்று நான் சொல்ல வேண்டுவதில்லை. பௌத்தம் இந்தியாவினின்றும் துரத்தப்பட்டது என்று சிலர் சொல்கிறார். அது முற்றிலுந் தவறு. பௌத்தம் ஹிந்து மதத்தில் நுழைந்தே யுள்ளது. ஹிந்து மதத்திலுள்ள குப்பைகளைத் தொலைக்கவே பௌத்தம் தோன்றிற்று. சமணமும் பௌத்தமும் ஹிந்து மதத்துடன் பிணக்குறுவனவல்ல என்றும், சமணமும் பௌத்தமும் ஹிந்து மதத்தைப் போதியவளவு சீர்
திருத்தின என்றும், பௌத்தம் அகத்தூய்மையை நேர்மை வழியில் வலியுறுத்திற்று என்றும், பௌத்தம் அகத்தூய்மைக்குரிய தென்றும், அது போலிச் செருக்குயர்வுகளைக் களைந்ததென்றும் மகாத்மா காந்தி பன்முறை கூறியிருக்கிறார்.
கடவுள்
கடவுளைப்பற்றி ஹிந்து மதத்துக்கும் பௌத்தத்துக்கும் பிணக்குண்டு என்று சொல்லப்படுகிறது. ஹிந்துக்கள் சிவபெருமானையும் திருமாலையும் வழிபடுவதுபோலப் பௌத்தர்களும் புத்தரை வழிபடுகிறார்கள். ஆனால் ஹிந்துக்கள் கடவுளைப் படைப்பாதித் தொழில் புரியும் ஒன்றாகக் கொள்கிறார்கள். பௌத்தர்களோ கடவுளை அவ்வாறாகக் கொள்வதில்லை. அவர்கள் கடவுள் என்பதை அறமாகக் கொள்கிறார்கள். இத்தத்துவ முறையிலுள்ள வேற்றுமைகளைச் சமயவாதிகளுக்கு விட்டுவிடலாம். அவைகளைப்பற்றி ஈண்டு விரித்தலே வீணாகும். கடவுள் ஐந்தொழில் புரிவதாயினுமாக; அறமாயினுமாக. வேண்டற்பாலது