பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தமிழ் நூல்களில் பௌத்தம்

பௌத்தர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் தங்களுக்குரிய சீலத்தை விடுத்துச் சினத்தைக் கொண்டார்கள் என்று கூறல் மிகையாகாது. இதற்குச் சமணம் என் செய்யும் ? பௌத்தம் என் செய்யும்?
மழைநீர் வானத்தினின்றும் புறப்படும் போது எவ்வளவு தூய்மையதா யிருக்கிறது? அது நிலத்தில் வீழ்ந்த பின்னை அஃதடையும் நிலைகளை என்னென்று சொல்வது! இவ்வாறே, ஒவ்வொருபோழ்துஞ் சமயகுரவர்களின் போதனைகள் தோற்றுவாயில் செம்மையாயிருக்கின்றன. அவைகள் மக்களிடைப் பரவும் போது, அவைகள் மீது பலதிற மாசுகள் படர்ந்து விடுகின்றன. குறைபாடு யாண்டையது?
பிற்காலச் சமண பௌத்தர்கள், சீலங்கள் மீது கருத்திருத்தாது, கடவுள் உண்மை கூறுவோரை இடர்ப்படுத்துவதில் மட்டுங் கருத்துச் செலுத்தலானார்கள். நந் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருவள்ளுவர், இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார் முதலியோர்க்குப் பின்னரே நாளடைவில் சமண பௌத்த அறநிலைகள் குலையலாயின என்று கூற லாம். திருவள்ளுவர் உள்ளிட்டார் காலத்தில் சமண பௌத்தங்கள் மக்களை அறவழியில் நிறுத்தி ஆண்டுவந்தன என்பதில் ஐயமில்லை. நாளடைவில் நிலை மாறிவிட்டது.
அறநெறியில் படர்ந்த மாசுகளைத் துடைத்துச் சீலத்தை வலியுறுத்தி யோம்பப் புத்தர் பெருமான் தோன்றியது போலக் கடவுளுண்மையை வலியுறுத்தப் பலவிடங்களில் பல சான்றோர்கள் தோன்றினார்கள். அவருள் திருஞான சம்பந்தருமொருவர். இடபதேவர், மஹாவீரர், புத்தர், அசோகர், திருவள்ளுவர் முதலியோர் காலத்திய சமண பௌத்தங்களை நெஞ்சிற்கொண்டு, சிலர் திருஞானசம்பந்தர்மீது வீண்பழி சுமத்துகிறார். மேற்குறிப்பிட்ட பெரியோர்கள் காலத்தில் நிலவியவாறே சமண பௌத்தங் கள் நிலவி யிருப்பின், திருஞானசம்பந்தர் வருகைக்கே இடன் நேர்ந்திராது.
திருஞானசம்பந்தர், சமண பௌத்தங்களின் பெயரால் மக்களிடைப் படர்ந்த மாசுகளைக் கழுவப் போந்தாரே