பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை
7

யன்றிச் சமண பௌத்தங்களையே வேரோடு கல்லப் போந்தாரில்லை. அவர் பாக்களிற்போந்துள்ள சமண பௌத்த மறுப்புரைகள், அவர் காலத்திய சமண பௌத்தங்களைக் குறிப்பன என்க. திருஞானசம்பந்தர் சமண பௌத்தங்களை அழிக்கப் போந்தவராயின், "சமண் சாக்கியம் ஆக்கிய வாறே" என்று பாடியிரார். இத்திருவாக்கால் சமண பௌத்தமும் ஆண்டவனருளால் தோன்றியன என்னும் உண்மையன்றோ புலப்படுகிறது? கால நிலை, மக்கள் நிலை முதலியவற்றை உன்னி, காய்தல் உவத்தல் அகற்றி, ஆராய்ச்சித் துறை நண்ணுவதே அறிவுடைமை. இது காலத்துக்குரிய ஒன்றாகலின், இதை ஈண்டுக் குறிப்பிடலானேன்.
பெயரளவில் சமயங்கள் பலவாயிருப்பினும், அவைகளின் உள்ளுறை ஒன்றையே குறிக்கொண்டு நிற்றலான், எச்சமயத்தையும் அழிக்க எவ்வறிஞரும் முற்படார். மனித வாழ்விற்கு இன்றியமையாத சமயம் என்னும் ஒன்றைக் காக்கவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் அதை அழிக்க முந்துவார்களோ?
பெரியோர்கள் கோலும் முறைப்பாடுகளில் வேற்றுமையிருத்தல் உண்மை. அம்முறைப்பாடுகள் காலதேசவர்த்தமானத்தையொட்டிக் கோலப்படுவன வாகலான், அவைகளில் வேற்றுமை யிருந்தே தீரும். அவ்வேற்றுமைக்கும் முதலென்னும் உண்மைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
சமய குரவர் என்று சொல்லப்படும் அனைவரும் அண்ணன் தம்பிமார்போல எனக்குத் தோன்றுகிறார். அவர்களிடைப் பகைமை யிருந்ததாகக் கருதும் மனம் எனக்குறவில்லை. எனது அனுபவத்தை உலகிற்குச் சொல்கிறேன். ஏதாயினும் வேற்றுமை காணப்படின், அதைக் காலதேச வர்த்தமானத்தின் பாற்படுத்தி, ஒதுக்கி, ஒற்றுமையை மட்டுங் கொண்டு, உய்யுநெறி காணல் வேண்டுமென்று இயற்கை அன்னை எனக்கு அறிவுறுத்துகிறாள்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூலர் அருளிய ஒருமை வழியே எனக்குரிய வழி. எனது சமயம் சமரச சன்மார்க்கம். உலகிலுள்ள சமயம்