பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

வி, கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

புராணாதிகளில் வழங்குவாராயினர். இதுதானுண்மை ; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.

இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சம்ஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத் திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங்கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.

அதன்மேல் முகலிடை கடையெலும் முச்சங்கத்தார் காலத்திலும் வட சொற்கள் தமிழ் நூல்களி லேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். ‘தொல் காப்பியம்’ என்னும் இலக்கணத்தினுள்ளும் ‘எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு’ என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண் டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.

பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக் கணக்காகச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டிலும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்க முற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப்புலவர்கள் தங்களாற் கூடிய மட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றிவிட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய்விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர்? முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப் பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வாராதவாறு, பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிது காலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிது காலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்திலே தான் ‘செந்தமிழ்’ ‘கொடுந்தமிழ்’ எனத் தமிழ் இரு பிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந் தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலும் தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவாம்.

இனி எத்துனை நாள் மேன்மேலெழும் வெள்ளத்தைத்தடுத்துக் கொண்டிருத்தல் இயலும்? ஆதலாற் பௌத்தரது முயற்சியா லேற்பட்ட கரைகள் ஆரியபாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. பௌத்தசமயமுந் தலைதாழ்ந்தது.

இந்நிலைமையிற் சைனர் எழுந்தனர். அங்ஙனமெழுந்த சைனர் ஆரியரது ஆசாரங்களுட் பலவற்றை மேற்கொண்டனர்; அஃதன்றியும் வடமொழியின்