பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

203

னர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர்.

“முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்
நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்”

என்று ஆரியரை நோக்கி முழங்குங் ‘கபிலரகவ’லையுங் காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்க ளெனவும் மேலதி காரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.

தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப்பாட் டிற்குப் பெரிது மிணங்கினாரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதிலும், பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துக்களும் அவ்வாறே இன்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளு மியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம் என்னும் பெயரில் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.

இவ்வாறு தமிழருட் பண்டிதராயினார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்ப் பாஷையின்கண்ணே வேரூன்றிவிட்டன, அவ்வா றாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம்.

வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்குமுள்ள பாஷை யொன்று கூடி யியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகளுளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயினவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற் கியைந்த வண்ணம், ஒசை வேறுபாடு செய்துகொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த