பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

டானதொரு தொழிலென்றே ஆதியின் மதிக்கப்பட்டது” என்று ‘நாடகலிய’லின் முகவுரைக்கட் கூறிய கூற்றையுங் காண்க.

இவ்வாறு தோன்றிவளர்ந்த நாடகத்தமிழ் வீழ் நிலையையடையப் புகுந்தது. அதற்குற்ற காரணம் யாது? ஒழுக்கநிலை வகுக்கப்புகுந்த ஆரியருஞ் சைனரும் நாடகக்காட்சியாற் காமமே அறிவினும் மிகப் பெருகுகின்ற தென்ற போலிக் கொள்கை யுடையராய்த் தமது நூல்களிற் கடியப் படுவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலத்திருந்த அரசர்களுக்குத் துர்ப்போதனை செய்து நாடகத் தமிழைத் தலையெழவொட்டாது அடக்கிவந்தனர், ஒளவையாருந் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையையே தீவினையச் சத்தின்பாற் படுத்துக் கூறுஞ் சைனர்கள் நாடகத் தமிழைக்கடிந்தது ஓராச்சரிய மன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக்கிடையில் நாடகத்தமிழ் எவ்வாறு தலையெடுத்து ஒங்கப்போகின்றது? ஆதலின் நாளாவட்டத்தில் அது சிறிது சிறிதாக வீழ்ந்துகொண்டே வாராநின்றது. அதன்மேல் இயற்றமிழ்க் காப்பியங்கள் நாடெங்கும் மலிந்து சிறந்து நாடகத்தமிழை வளரவொட்டாது தடுப்பனவாயின.

இவ்வாறு நாடகத்தமிழ்க்கு நாற்புறத்தினுந் தடைகள் அமைக்கப்பட்ட மையின் அஃது அழிநிலையடையத் தலைப்பட்டது. பண்டிதராயினார் கடிந்து நாடகத்தமிழைக் கைவிடவே, அது பாமார் கையகப்பட்டு இழிவடைந்து தெருக்கூத்தளவிலே நிற்கின்றது. அக்காலத்துச் சங்கப் புலவர்கள் செய்த ‘பரதம்’, ‘அகத்தியம்’, ‘முறுவல்’, ‘சயந்தம்’, ‘குணநூல்’, ‘செயிற்றியம்’, ‘மதிவாணர் நாடகத்தமிழ் நூல்’, ‘கூத்த நூல்’, ‘நூல்’ என்ற நாடகத்தமிழ் நூல்களெல்லாம் யாண்டுப்போயொளித்தன? ‘சிலப்பதிகாரம்’ என்னும் நாடகக்காப்பியமட்டிலே தப்பித்தவறி வெளியேறிவிட்டது. அதனை வெளிப் படுத்திய பண்டித சிகாமணி சாமிநாதையர்க்குத் தமிழுலகஞ் செய்யக்கடவ கைம்மாறென்னே!

இனிப்பரத சாஸ்திரமும் காமக்கணிகையர் வயப்பட்டுத் தாழ்வடைந்து நிற்கின்றது. அதனையும் அறவொழிக்கப் புகுந்து முழங்குகின்றனர் சிலர். எனினும் கி. பி. பதினேழா நூற்றாண்டினிறுதிதொட்டுக் கூத்து நூல்கள் சில, வேரற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்றும் கிளைப்பனவாயின. இடையிடையே கவிகூற்றுமேவி, இழிசினர் நடக்கு மியல்பினவாகிக், கூத்தும் பாட்டுங்கொண்டு நடப்பனவெல்லாம் கூத்து நூல்களாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் செய்த ‘இராமநாடக’மும் குமரகுருபரசுவாமிகள் செய்த ‘மீநாக்ஷியம்மை குற’மும், திரிகூடராசப்பக்கவிராயர் செய்த ‘குற்றாலக் குறவஞ்சி’யும் இக்கூத்து நூலின் பாற் படுவனவாம். ‘முக்கூடற்பள்ளு’ ‘பறாளை விநாயகர் பள்ளு’ முதலியனவுங் கூத்து நூல்களேயாம். இவையெல்லாம் இயற்றமிழ்ப் புலமை சான்ற பாவலர் இயற்றியனவாம். ‘சுத்தாநந்தப் பிரகாசம்’ என்றதோர் பரதநூல் இடைக்காலத்தின் தொடக்கத்தி லேற்பட்டுள்ளது வெளிப்படாமலிருக்கி