பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

211

சில்லோரால் விளைந்த கேடாமிது. இவ்வுலக வாழ்க்கைக்கு அறம் பொரு ளின்பமென்ற மூன்றுஞ் சிறந்தனவா மென்னு முண்மையை நன்குணராது, ‘அறமே யாவரும் பின்பற்றுதற்குரியது, மற்று இன்பம் கைவிடுதற்குரியது’ என்று எண்ணி, இசையினால் இன்பம் மிகுதலின் அதனையுங் கடியவேண்டு மென்று புகுந்து, ஆரியருஞ் சைனரும் ஒருங்கு சேர்ந்து இசைத்தமிழைப் பெரிதும் அலைத்துத் தொலைக்கமுயன்றனர். [இசை நாடகங் காமத்தை விளைக்குமென் றுரைத்தார் உரையாசிரியர்களுள் தலைநின்ற நச்சினார்க்கினியரும்] அம்முயற்சிகளில் அநேக நூல்கள், அந்தோ! அழிந்துபோயின, இப்போழ்து எஞ்சியிருப்பது மிகச் சிலவே. இவற்றை இறைவன் பாதுகாத் தருள்க. மேற்கூறிய மருட்கையுணர்ச்சி இக்காலத்திலும் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது. இஃதென்னே !

நாடகத் தமிழென்பது, கையில் நாலெடுத்துப் படித்தற்குரிய அவகாச மில்லாத வேலைக்காரர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும், நல்லறிவு புகட்டும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டது; அது கேட்போர்க்குங் காண் போர்க்கும் இன்பம் பயவாவிடின், சாமானிய சனங்கள் அதனை விரும்பிச் செல்லாராதலின் அஃது இன்பச் சுவையோ டியல்வதாயிற்று. உலகத் தினியல்பினை உள்ளதை யுள்ளவாறே புனைந்து காட்டுவது நாடகத் தமிழே யன்றி வேறில்லை. இயற்றமிழும் இசைத் தமிழுஞ் சேர்ந்தவழியே நாடகத் தமிழ் பிறந்ததெனினும் நாடகத் தமிழிற்கு வேறு தனிப்பெருஞ் சிறப்புளது. முன்னையன இரண்டும் கேள்வி யின்பம் மட்டிலே பயப்பனவாய் நிற்கின்றன. இவ்விரண்ட னடியாகப் பிறந்த நாடகத் தமிழோ கேள்வி யின்பம் பயப்பதேயன்றிக் காட்சியின்பமும் உடன் பயக்கின்றது. இச்சிறப்புப் பற்றியே பிற நாடுகளிலுள்ள பிறபாஷைப் புலவர்கள் நாடகங்களை மிக்க மேன்மை யுடையனவாக மதிக்கின்றனர்.

இத்துணைப் பெருமைவாய்ந்த நாடகத் தமிழின் தோற்றமென்னை? “தமிழ்நாடகம் முதலிலுண்டானது மதவிடயமாகவே யென்பது துணியப்படும். அது கடவுளார் திருவிழாக் காலங்களில் ஆடல்பாடல்க ளிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதினின்றும் உண்டாயிற்று. சில காலத்தின் பின்னர்க் கதை நடையான மனப்பாடங்களும் உடன் கூடின ; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள சம்பாஷணைகளும் பின்னர் வசனமாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத்தமிழ் ‘வேத்தியல், பொதுவியல்’ என்ற இருபிரிவின தாசி அரசர்களானும் ஏனையோரானும் ஆதரித்து வளர்க் கப்பட்டது. கி. மு. மூன்றா நூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனினுஞ் சற்று முற்காலத்தினாதல் நாடகத்தமிழ் உயர்நிலை யுற்றிருந்திருத்தல் வேண்டும். நாமுணர்ந்த பழமையான நாடகத்தமிழ்நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்றுநிலவினவாதலினென்க. ஆகவே அது குற்றங்குறைவு இல்லாது உண்