பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

219

ளும் ஒலிக்கூட்டங்களும் மூவிதப்படும். அவை தாம், போறல்வகையானும், சுவை வகையானும், அறிகுறி வகையானும் எழுந்தனவாம்.

பேச்சு நிலைக்கு வாராது சைகை நிலையில் நின்ற காலத்திலெல்லாம் தமிழ் மக்கள் புவி முதலியவற்றைக் கொன்று வேட்டைத் தொழில் செய்து வந்தனர். இவ்வேட்டைத் தொழிலைச் செவ்விபெற நடாத்துவதற்கு மிருகங்களின் ஒலிகளை யுற்றுக் கேட்டு நன்குணர்ந்து அவைபோலத் தாமுங் கத்தி அவற்றை ஏமாற்றித் தம்வலைப் படுத்தினர். வேட்டையாடுதலைப் பயன் கருதியதோர் தொழிலாகவே முற்றும் மதித்தல் நேரிதன்று. இஃது ஆதிமக்களால் விளையாட்டுத் தொழிலாகவுங் கருதப்பட்டு வந்தது. இக்காலத்திலும் வேட்டை யாடுதல் பலர்க்குப் பிரீதியானதோர் விளையாட்டாம். இவ்வாறு ஆதித் தமிழ் மக்கள் வேட்டையாடினதனாற் பலவகைப்பட்ட மிருகங்களினொலி வேறுபாடு களையும் நன்குணர்ந்து தமக்குள்ளே யவற்றை யறிந்து கொள்ளுமாறு அவ் வொவிகளினின்றுங் குறிப்பு மொழிகள் பல வகுத்தனர், ஒன்று பிறிதுபோற் கத்திய ஒலியினின்றும் உற்பத்தியான சொற்களைப் ‘போறல் வகை’ யானெழுந்தன வென்க.

மக்கள் சுவையுடையாராதலின், அவற்றிற்குத் தகுந்த மெய்ப்பாடுகள் விளைக்கத்தக்க பொருள்கள் எதிர்ப்பட்டனவாயின், சில குறிப்புச் சொற்கள் தாமாகக் கூறுவரன்றே? வெறுப்புச் சுவையிற் ‘சீ’ யென்றும், வெகுளிச் சுவையிற் ‘போ’, வென்றும், உவகைச் சுவையில் ‘வா’ வென்றும் கூறப்படுஞ் சொற்களைக் காண்க. ‘ஐ’ யென்பது வியப்பினாலும், ‘ஓ’ வென்பது அவலத் தினாலும் ‘ஐயோ’ வென்பது அச்சத்தினாலும் எழுந்தனவாமா றுணர்க. இவைகளெல்லாஞ் ‘சுவை வகை’ யாலுண்டாகிய சொற்களாம்.

‘அறிகுறி வகை’யா னெழுந்த பகுதிகள் மிகச் சிறப்புடையனவாம், இவைகள் ‘நாவின் சைகை’ என்பதனடியாக முதலிற் பிறந்தன. இஃது அடிக்கடி, பல், உதடு முதலிய வாயின் பகுதிகளைச் சுட்டுதற்குரிய ‘கைச் சைகை’களைக் கவனிக்குமாறு கூவுங் கூச்சலோடு தொடங்கும். வேண்டுமென் றெழாது அதுதாபத்தினா லுதவிசெய்யா வெழுந்த நாவின் சைகை இயற்கை யாகவே கைச் சைகையைப் பின்பற்றிவரும். அதன்மேற் கைச்சைகை மிகை யென்று சிறிது சிறிதாகக் கைவிடப்படும். உதாரணமாக, கவனிக்குமாறு கூவிய கூச்சல் ‘ஆ’ என்ற உருவங்கொண்டதாக வைத்துக் கொள்வோம். அப்படியானாற் ‘பல்’லைக் குறிக்கும் நாவின் சைகை ‘அடா’ என்ற உருவங் கொள்ளும். இவ்வாறே தன்னைக் கவனிக்குமாறு பிறரை விளித்த விளி ‘ஏ’ என்றிருந்ததாயின், பல்லைக் குறிக்கும் நாவின் சைகை ‘ஏட’ வென்றிருக்கும். ஈண்டுக் கூறியதற்கிணங்கவே, தமிழ்மொழியின் கண்ணே , ‘அடா’ ‘ஏட’ என்ற விரண்டு சொற்களும் பிறரை விளித்தற்கட் பெரிதும் பயன்படுகின்றன. “ஏட வென்பது தோழன் முன்னிலை” என்று கூறப்பட்டிருத்தலுங் காண்க.