பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

ஆயிரம்=தொள்ளாயிரம்’ எனவுஞ் செய்கை செய்து முடித் தமைக்கலாமென்பது எமது துணிவு.

தமிழ்ப் பாஷையில் நாட்பெயர், கோட்பெயர், மதிப்பெயர் என்பவற்றுட் பெரும்பாலன தமிழ்ச் சொற்களேயாம்; சிறுபாலன சந்தேகத்தெற்கு இடந்தருகின்றன. அவை, ‘புதன், சனி’ என்பனவும், பிறவும் போல்வன. இத்தகையன வடசொற்க ளென்று கூறினும் படுவதோ ரிழுக்கில்லை யென்னலாம்.

‘கடவுள்’ என்ற சொல்லுண்மையானால், தமிழர் ‘கடவுளுண்டு’ என்ற கொள்கை யுடையாரென்க. தமிழில் முருகக் கடவுளைக் குறிப்பதற்குப் பல சொற்களிருப்பவும், ஏனைய கடவுள்களைக் குறிப்பதற்குத் தக்க சொல் ஒன்றேனு மின்மையால் முருகக் கடவுளொருவரே தமிழ்க்கடவுள், மற்றைக் கடவுள்கள் தமிழ்க்கடவுளரல்லரென்று வாதிப்பார் பலருளர். சிலர் சிவபிரானையுந் தமிழ்க் கடவுளென்பர். அவரது கொள்கைப்படி ‘சாஸ்தா’ சைவக் கடவுளுந் ‘திருமால்’ ஆரியக்கடவுளுமாவர். சில்லோர் தமிழ்ப் பாஷைக்குள்ளே ‘விக்கிரகம்’ என்றதைக் குறிப்பதற்குத் தக்க தனித்தமிழ்ச் சொல்லில்லை யெனவும், அதனால் தமிழர்கள் விக்கிரகாராதனம் செய்பவர்களல்ல ரெனவும் துணிந்து கூறுவாராயினர். அவர் கூற்றுப் ‘படிவம், வடிவம்’ என்ற தனித்தமிழ்ச் சொற்களாற் போலியென்று ஒதுக்கப்படுவதாயிற்று. அன்றியுந் தமிழர் முதுமரங்களிற் கடவுளை ஆரோபித்துத் தொழுதனரென்பது பண்டைத்தமிழ் நூல்களான் ஏற்படுகின்றது.

“கட்புல ளில்லாக் கடவுளைக் காட்டுஞ்
சட்டகம் போலச் செவிப்புல வொலியை
உட்கொளற் கிடுமுரு வாம்வடி வெழுத்தே”

என்ற இலக்கண நூலார் கூற்றையும் உய்த்துணர்க.

பாஷையின் சிறப்பியல்பு முற்றிற்று.
 

 
VII. பாஷை வேறுபடுமாறு.
 

 

பேச்சு வழக்குள்ள பாஷைகளெல்லாம் எப்பொழுதும் பலவகையிலும் வேறுபட்டுக் கொண்டே யிருக்கின்றன. வேறுபடுதலின்றி யொரு நிலைப்பாடு அடைந்துள பாஷைகளுக்கு அழிவு வெகுதூரத்தில் இல்லை. ஆகவே பேச்சு வழக்குள்ள பாஷைகள் அழியாது நீடித்தகாலம் இயங்க வேண்டுமாயின், அவற்றிற்கு வேறுபாடு இன்றியமையாதது. தமிழும் பேச்சு வழக்குள்ளதோர் சிறப்புடைப் பாஷையாமாதலின் இஃதும் வேறுபட்டியங்குவது நியாயமே. அவ்வாறே யாரென்ன தடுத்தபோதிலும் தமிழ்ப் பேராறு தனக்கெதிருள்ள தடைகளனைத்தையும் உந்தியெறிந்து சுழிகொண்டு விளையாடிச் செல்லா நின்றது.