பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

233


“குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்”

என்று குமரகுருபர சுவாமிகள் தமது ‘மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழ்’ நூலின்கட் கூறியதுங் காண்க.

“கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற விடும்வேலா”

என்றார் அருணகிரிநாதரும். இன்னும் இதனைக் குறித்துப் பிறிதோரமயத்திற் பேசுதற் கிடலுண்டாதலின் இதைவிடுத்து மேற்செல்வாம்.

நெட்டுயிருங் குற்றுயிரும் வெவ்வேறு விதிகள் பற்றி வேறுபடுகின்றன. ‘சந்தியக்கரங்க’ளாகிய ஐகார ஔகாரங்கள் விசேஷமாக நிலைபேறுடையனவல்ல. ஆதலா னன்றே அவைகளிரண்டும் தம்மாத்திரையிற் குறுகி யொலிப் பனவாயின. ஐகார ஔகாரக் குறுக்கங்கள் தமிழிலக்கணங்களிற் பெரிதும் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஆண்டுக் கண்டுகொள்க. தனிக் குற்றெழுத்திற்குப் பின்னேயடுத்து வரும் நேரசைகளெல்லாம் தம்மளவிற் சிறிது குறுகி, நிரையசையாகின்றன. குற்றெழுத்துகள் வீழ்ந்துபடி மியல்பின; எனினும் அவை நெட்டெழுத்துக்களினும் மிக்க நிலைபேறுடையன. இரண்டு மாத்திரை யளவுகாலம் வரையில் நாவை ஒருநிலைக் கண்ணே நிறுத்தி வைத்தல் மிகவும் அரியதோர் செயலாதலின், நெட்டுயிர்கள் அத்துணை நிலை பேறுடையனவல்லவாயின.

இனித் தமிழ்மக்கள் வேற்றுமக்களொடு வாணிக நிமித்தமாக ஊடாடுங் காலத்தும் அவர்கள் இவர்களொடு வந்து கலக்குங் காலத்தும் புறத்தடைகள் எவையு மில்லாமையாற் பிற பாஷைகளினொலிகள் தமிழின்கட் புகுவனவாயின. இத்தகைய கலப்பினால் தமிழ்ப்பாஷையின் கண்ணே ரகர, றகர வேறுபாடு காண்டலும் ழகர, ளகர வேறுபாடு காண்டலும் அரியவாயின. ஆரியர் கலப்பினால் ரகர றகரங்கள் எல்லாம் ஒரே ரகரமாகவும், ழகர ளகரங்களெல்லாம் ஒரே ளகாரமாகவும் உச்சரிக்கப்படுவனவாயின. தமிழ்ப்பண்டிதராயினார் இவ்வுச்சாரண விஷயமாக மாணாக்கர்களை எவ்வளவு திருத்தியும் அவர்கள் திருந்துதல் அரிதாயிருக்கின்றது. ழகர ளகர வேறு பாட்டை அறவே யொழிக்கக் கருதி வீரசோழியமுடையார் ஈரெழுத்துக்களையும் ஒன்றுபோல் வைத்துக் காரிகை செய்தனர். அவர் விதியின்படி ‘புகழ்+தீபம்=புகடீபம்’ எனவும் ‘பாழ்+நரகு=பாணரகு’ எனவும் வரும்.

“திகட சக்கரச் செம்முக மைந்துளான்

என்று காப்பிலுரைத்தார் ‘கந்தபுராணம்’ செய்த கச்சியப்ப சிவாசாரியரும்.

வளர்மொழிகளெல்லாம் தனித்தனி நால்வேறு நிலைகளுடையனவாம். அவைதாம் ‘தனிநிலை’ ‘தொடர்நிலை’ ‘உருபு நிலை’ ‘பிரிவுநிலை’ யென்பனவாம். தனிநிலைப் பாஷைகளெல்லாம் சில நூற்றாண்டுகளில் தொடர்நிலைப் பாஷை

80