பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

235

னுஞ் சொற்கள் தம்பொருட்பெற்றி முற்றிலும் வேறுபட்டனவாமாறு காண்க. தமிழ்மகளிர் பனையோலைச் சுருளும் தென்னோலைச் சுருளும் தங் காதணியாகக் கொண்டமை பற்றி அக்காதணியும் ‘ஓலை’ யென்னப்பட்டது. இப்போது பொன்னாலும் மணியாலுமியன்ற காதணிகளும் அந்த ‘ஓலை’ச் சொல்லாலேயே குறிக்கப்படுத லுணர்க. ஆதியில் மரத்தினாற் செய்யப்பட்ட உழக்கிற்கு ‘மரக்கால்’ என்று பெயர். இப்பொழுது அஃது இரும்பினாலாகிய குறுணியளவு கருவியையே குறித்தலுமுணர்க. சில சொற்கள் ஆதியில் இழிபொரு ளுணர்த்தி இப்போது அவற்றை இழந்து உயர்பொரு ளுணவர்த்துவனவாம். ‘களிப்பு’ என்றசொல் முதலிற் கள்ளுண்டு களித்தலையே யுணர்த்திற்று; இப்பொழுது ‘மகிழ்ச்சி’ என்ற உயர் பொருள் பெற்றது. ‘விளையாட்டு’ என்ற சொல் ஆதியிற் கள்ளுண்டு ஆடுதலைக் குறித்தது; இப்பொழுது அது கள்ளுண்ணாமல் ஆடுகின்ற பலவகை விநோதமான ஆட்டங்களையுங் குறிக்கின்றது. இவ்வாறு வரும் நியமத்திற்கு ‘உயர் பொருட்பேறு’ என்னும் பெயரிடலாம். இனி இதுபோலவே ‘இழிபொருட் பேறு’ முண்டு. அஃதாவது சொற்கள் முதலில் உயர்பொருள் உணர்த்திப் பின்னர் இழிபொருள் தருமென்பது. உதாரணமாக ‘நாற்றம்’ என்ற சொல்லைக்காண்க.

“ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
யாகு பெயரன் மொழிவினைக் குறிப்பே
முதறொகைக் குறிப்போ டின்ன பிறவுங்
குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை.”

என்ற ‘நன்னூற்’ சூத்திரவிதியிற் கூறப்பட்டுள்ள குறிப்புச் சொற்களெல்லாம் பொருட்பெற்றி வேறுபடுமாறு காட்டுகின்றன.

இனிமக்களாவார் உணர்ந்துகொண்டே சிலவேறுபாடுகள் செய்தலுண்டு. ஒவ்வொரு கூட்டத்தார் யாதேனும் ஒரு பொருளை மறைத்துக் கூறவேண்டி, அதனது சொற்குறியை யொழித்து வேறொரு சொற்குறியால் அதனைக் கூறும் ‘குழூஉக்குறி’ என்பதும் ‘பிறிதினவிற்சி,’ ‘புனைவிலி புகழ்ச்சி’ முதலிய அணி வகைகளும் அறிந்து செய்வேறுபாட்டின்பாற் படுமென்க.

இவ்வாறு நிகழ்கின்ற வேறுபாடுகள் நிகழவும் வேண்டும்; அவ்வேறுபாடுகள் அளவிறந்தனவாகாமல் அடக்கவும் வேண்டும். ஆதலாற் பாஷையின் வேறுபாடுகளை யடக்குதற் பயன் கருதியே இலக்கணங்க ளேற்பட்டன. இவ்விலக்கணங்கள் தாமும் பாஷையின் இயக்கத்திற்குத் தக்கபடி இயங்காதிருத்தல் பாஷைக்கே கேடுவிளைக்கும். இவ் வுண்மையைத் தமிழ் நூலார் சிலகாலங்களில் நன்குணர்ந்து நடந்துவந்தனர். பேச்சுத் தமிழ்ச் சொற்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழிலக்கிய நூல்களி லேறின. அவ்வாறு இலக்கியங்கண்ட சொற்களுக்கு இலக்கணமும் நாளேற நாளேற இயம்பப்படுவன வாயின. இலக்கியங்கண்ட சொற்களெல்லாம் நிகண்டுகளிலும் புகுந்தன.