பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

எனினும் காலாந்தரத்தில் ஆராய்ச்சிகளால் இவ்விடர்ப்பாடு களையப்பட்டு உண்மை வெளிப்பட்டு மேற்கூறிய கூற்றுக்கள் வலியுறனும் உறலாம்.

இவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னுங் கண்டுபிடிக்கப் படாதனவும் போக, இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘அகத்தியம்’ என்ற நூலின்கட் சில சூத்திரங்களும், இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணநூலும் கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘எட்டுத் தொகை’ என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும் ‘பத்துப்பாட்டும்’ ‘பதினெண் கீழ்க்கணக்கு’மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க:

“நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத்தொகை”

இவ்வெட்டுத் தொகையுட் கலித்தொகை, ஐங்குறு நூறு, புறநானூறு என்ற மூன்று நூல்களும் அச்சாகி வெளிப்போந்துள. இம்மூன்றனுள் முன்னைய இரண்டும் அகப்பொருளும் பின்னைய தொன்று புறப்பொருளுங் கூறுவனவாம். ‘பத்துப்பாட்டு’ வெளியாகிவிட்டது. இது பெரும்பாலும் அரசர்களைச் சிறப்பித்துக் கூறுவது; இதன்கண் ‘திருமுருகாற்றுப் படை’ என்ற முதற் பாட்டு மட்டில் முருகக் கடவுளைப் புகழ்வது. பத்துப்பாட்டு நூல்களை யிவ்வெண்பாவா னுணர்க:

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினி
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.”

மற்றுப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பின்வரும் வெண்பாவா னுணர்க:

“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு”

இனி இவற்றுளடங்கியதாய்ச் சங்கத்தாராற் செய்யப்படாது, திருவள்ளுவனாராற் செய்யப்பட்டுச் சங்கத்தாரான் அங்கீகரிக்கப்பெற்ற ‘திருக்குறள்’ என்ற அரிய நூலும் இவ்வாதிகாலத்ததாம். இந்நூல் மக்களுறுதிப் பொருள்களாகிய ‘அறம்பொருள் இன்பம் வீடு’ என்ற நான்கனுள் முதல் மூன்றையும் பற்றிப் பொதுவகையால் யாவருமொப்ப விரித்துக்கூறும் 1330 குறள்வெண்பாக்களாலாயது. இதனை மேற்கொள்ளாத நூலும் புகழாத மாந்தருமில்லை. திருவள்ளுவனாரது சகோதரியாரெனக் கூறப்படும் ஔவையார் செய்தருளிய ‘ஆத்தி