பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

239

கொள்ளின் மேற்கூறிய பாண்டியர் எண்பத்தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மரும் ஆண்ட காலத்தின் அளவு குறைந்து நம்புதற் பாலதாகுமென்க. இத்துணை யுய்த்துணரமாட்டாத சிலர் வேறுபடக் கூறுவர்.

களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரினின்றும் பத்தாந் தலைமுறை யாளராகிய நீலகண்டனார் “கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங் குன்றூர்க்கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லுந்துவனாரும் மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடிநாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன ‘நெடுந்தொகைநானூறு’ம் ‘குறுந்தொகை நானூறு’ம் ‘நற்றிணை நானூறு’ம் ‘ஐங்குறுநூறு’ம் ‘பதிற்றுப்பத்து’ம் ‘நூற்றைம்பதுகலி’யும் ‘எழுபது பரிபாட’லும் ‘கூத்து’ம் ‘வரி’யும் ‘பேரிசை’யும், ‘சிற்றிசை’யுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் ‘அகத்திய’முந் ‘தொல்காப்பிய’முமென்ப. அவர் சங்கமிருந்து தமிழா ராய்ந்தது[1] ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற் றியாண்டென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயனார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ‘உத்தரமதுரை’ யென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப” - என்று கடைச் சங்கத்தைப் பற்றிக் கூறாநின்றனர்.

இக்கூற்றை யாராயு மிடத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மரும் ஆண்டகாலம் இடையீடுபட்டுக் கழிந்த காலத்தொடுங் கூடி ஆயிரத்தெண்ணூற் றைம்பதிற்றியாண்டாகின்றது. பாண்டிய ரொவ்வொருவரும் (இடையீட்டுக் காலத் தொடுங்கூட்டி) முப்பத்தெட்டாண்டுகள் அரசாட்சிசெய்தவராகின்றனர். இது நம்புதற் பாற்றே. இனித் தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பது வருஷங்களும், இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழுநூறு வருஷங்களும், கடைச்சங்கமிருந்த ஆயிரத் தெண்ணூற் றைம்பது வருஷங்களுமாகக் கூடி ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்களாகின்றன. இதனைக் கிபி நூற்றிலிருந்து பிற்கணக்கிட்டுச் சென்றால் தலைச்சங்கம் கி.மு. ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்கட்கு முன்னர்த் தாபிக்கப் பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மொழியின் தொன்மை மாட்சிகூறிவந்தவிடத்துக், கி.மு. 8000 ஆண்டுகட்கு முற்பட்ட எழுத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள வென்றமையால் அதனினும் ஏறக்குறையப் பத்தொன்பது நூற்றாண்டுகள் முன்னரே தலைச் சங்க மேற்பட்டுவிட்ட தென்றல் சாலாதென வாதித்தற்கும் இடமுண்டு.


  1. ஆயிரத்துத் தொள்ளாயிரத் தைம்ப தென்பாரு முளர்.