பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

இரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் ‘அகத்தியம்’ என்ப” எனத் தலைச்சங்கத்தைப்பற்றியும், “இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திறையன் மாறனும் துவரைக்கோமானும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்மதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்தெழு நூற்றுவர் பாடினாரென்ப. அவரகளாற் பாடப்பெற்றன ‘கலி’யும் ‘குருகு’ம் ‘வெண்டாளி’யும் ‘வியாழ மாலையகவ’ லுமென இத்தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் ‘அகத்திய’மும் ‘தொல்காப்பிய’மும் ‘மாபுராண’மும் ‘இசைநுணுக்க’மும் ‘பூதபுராண’முமென இவை. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவரைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதினம ரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ‘கபாட புர’த்தென்பது. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது” என இடைச்சங்கத்தைப் பற்றியும் கூறப்பட்டுள.

இக்கூற்றுக்களை யாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, தலைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய ஐம்பதைம்ப தாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டு மென்பதும், இடைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய அறுபத்துமூன் றறுபத்து மூன்றாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும் போதருகின்றன. இச் சங்கங்க ளிரண்டும் நீடித்தகாலம் நடந்து வந்திருக்க வேண்டு மென்பதிலும் பல நூல்களியற்றப்பட்டன வென்பதிலும், பாவலர் பலர் சங்கத்தை யொட்டி வாழ்ந்தன ரென்பதிலும், சங்கமிரண்டும் முறையே யிருந்த மதுரையும் கபாடபுரமுங் கடல் கொள்ளப் பட்டனவென்பதிலும், அது காரணமாகப் பல அரிய தமிழ் நூல்கள் அழிந்து பட்டன வென்பதிலும் ஐயப்பாடில்லை யென்னலாம். மற்றுப் பாண்டியராசர்கள் முறையே ஐம்பதாண்டும் அறுபத்து மூன்றாண்டுமாக ஆண்டு வந்தன ரென்றுரைத்தல் ஐயுறற்பாலதே. ஆயினும், பாண்டியர் எண்பத்தொன்பதினமரும் பாண்டியர் ஐம்பத்தொந்பதின்மரும் ஒரே தொடர்ச்சியாக ஆண்டுவந்தன ரென்று கருதாது, நடுவில் இடையீடுபட்டு அரசின்றிக் கழிந்த ஆண்டுகளும் இவ்வாண்டுகளுடன் கூட்டிக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டுமென்று கருதுக. இவ்வாறு தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணை யாண்டுகளோ? இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழுநூற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணையோ? இவற்றுக்கும் ஒருவாறு உத்தேச வகையால் தக்க கணக்கிட்டுக்