பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

237

டுரைக்கமுடியா. இப்போதுள்ள பாஷைகளெலெல்லாம் மிக்க நூற்செல்வ வாய்ப்புடையது ‘ஆங்கில பாஷை’யாம். ‘ஜெர்மானியம்’,‘பிரெஞ்சு’ முதலியன ஆங்கிலத்திற்கு அடுத்தபடியில் நிற்கத் தக்கனவெனக் கூறலாம்.

தமிழ்மொழியை இவ்விஷயத்தில் இவற்றோ டொப்பிட்டுப் பார்ப்போம். தமிழிலுள்ள நூல்களெல்லாம் அறம் பொரு ளின்ப வீடுகளாகிய நான்கு புருஷார்த்தங்களையே கூறுவனவாம். சிறுபான்மையான வைத்திய நூல்களுஞ் சோதிட நூல்களுமாம். மற்றுப் ‘பௌமிய நூல்’, ‘வான நூல்’, ‘மனித நூல்’, ‘விலங்கியனூல்’, ‘மனிதசமூகநூல்’, ‘உள நூல்’, ‘உயிர் நூல்’, ‘உடனூல்’, ‘பொருள்வலி நூல்’, ‘பொருட்டிரிவு நூல்’ முதலிய பலசாஸ்திரங்களின் உண்மைகள் தெரிப்பனதமிழின்கட் கிடையா. ஆங்கில பாஷையிற் புதிது புதிதாக வெளிப்படும் விநோத நூல்கள் போன்றன நந் தமிழின்கட் காண்டலரிது. ஆங்கிலத்தில் இக்காலப் பாவலர் பாடல்கள் விசேடமான கௌரவமுடையன. தமிழிலோ இக்காலப் பாவலர் பாடல்கட்கு விசேட மதிப்பில்லை. தமிழ்மொழிக்குள்ள கௌரவ மெல்லாம் பூர்வகாலத்து நூல்களிலேயே யன்றிப் பிற்காலத்து நூல்களிலே யென்னப்படாது.

இனி I.ஆதிகாலம்: II இடைக்காலம்: (1) முற்பகுதி (2)பிற்பகுதி: III. பிற்காலம் என வெவ்வேறு பாகுபாடு செய்துகொண்டு தமிழ் நூற் பரப்பை ஓராற்றான் ஆராய்வாம்.

I. ஆதிகாலம்: கி.பி. 100-க்கு முற்பட்டகாலம்
II. இடைக்காலம் (1) முற்பகுதி: கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம்.
(2) பிற்பகுதி: கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்.
III. பிற்காலம்: கி.பி. 1400 முதல் இற்றைநாள் வரையிலுள்ள காலம்.

I ஆதிகாலம்: கி.பி. 100-க்கு முற்பட்டகாலம்.

ஆதிகாலமென்பது சரித்திர வாராய்ச்சிக்கு வாராத முற்காலம். முச்சங்கங்களிலே தலைச்சங்கத்தின் காலமும் இடைச் சங்கத்தின் காலமும், கடைச் சங்க காலத்தின் முற்பகுதியும் இவ் வாதிகாலத்தின் கண்ணேயடங்கும். இம்முச் சங்கங்களையும் பற்றி ‘இறையனாரகப் பொருளுரை’ யின்கட் கூறப்பட்டிருப்பதே மிகப்பழமையான சரிதம். அதன்கண்ணே, “தலைச்சங்க மிகுந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பதொன்பதின்மர் என்பது. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்பது. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ ‘பரிபாட’லும், ‘முதுநாரை’யும் ‘முதுகுருகு’ங் ‘களரியாவிரை’யும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்பது. அவர்களைச் சங்கம்