பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை.



“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற திருவள்ளுவனார் திருவாக்கின்படி, இந்நூலை அறிவுடையோர் காணலுற்றால் அவர் இதன்கட் பொதிந்துள விஷயங்களின் செவ்வியை உள்ளவாறு அறிந்து தக மதிப்பர் என்னும் துணிவு கொண்டெழுந்தே யாம் இச்சிறு நூல் வகுக்கப் புகுந்தனம்.

ஒருபாஷையின் வரலாறு என்றாலென்னை? இதன் பொருள் யாது? இது மேற் பார்வைக்குத் தெளிவான பொருள் கொண்டதுபோல் தோன்றாமலிருந்த போதிலும், உய்த்துணருமிடத்து இதற்கு இது தான் பொருளென்று வரைந்து எட்டலாகும் படியிருக்கின்றது. தேசசரித்திரம் போலப் பாஷைவரலாறு கூறல் இயலாது. இன்னவிஷயம் இக்காலத்தில் நிகழ்ந்த தென்றும் அதன் பயன் இன்னதென்றும் நிச்சயமாகத் தேசசரித்திரங்கூறும். பாஷைவரலாற்றிற் காலவரையறை கூடியதெல்லாம் உத்தேசமுறை பற்றியேயாம். மற்று, நிகழ்ச்சிவரலாறும் பயனும் சிறிதளவு தெளிவாகக் கூறலாம்.

நூல்களின் வரலாறும் நூலாசிரியர்களின் வரலாறும் பாஷை வரலாற்றொடு நேரே சம்பந்தப் பட்டனவல்ல. எனினும் ஓராற்றாற் சிறிதளவு இயைபுண்டு. அவ்வியைபு நினைவிலிருக்கவேண்டும். பொருள் அறிவுறுக்கும் ஒலிகளின் தோற்றமும் சொல்லாக்கமும் பேச்சுவழக்கும் அது பரவியவாறும் பாஷையாயினமையும், பாஷையின் நெடுங்கணக்கும், எழுதப்படுமாறும், ஏட்டுவழக்கும், இலக்கண வரம்பும், பாஷையமைப்பும், சொன்மரபும், நூன் மரபுமாகிய இவையனைத்துமே பாஷை வரலாற்றின் விஷயங்களாம். இவைகளே இந்நூலின்கண் ஆங்காங்கு விரித்துக் கூறப்படுகின்றன. இந்நூலின் பொருளடக்கத்தை ஒருமுறை உற்றுநோக்கின் இந் நூலினியல்பு இன்னதென விளங்கும்.

இத் தன்மையான நூல்கள் ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் பல விருக்கின்றன. மற்றுத் தமிழ்மொழிக்கோ ஒன்றேனுமில்லை. ஆங்காங்கு வந்தவரும் போனவரும் தமிழைப் பற்றித் தத்தமக்குத் தோன்றியவைகளை வாய்க்கு வந்தபடி யெல்லாம் ஆங்கிலத்தில் மூலைக்கு மூலை பல புத்தகங்களுள் எழுதி வைத்தவைகளே நிவதவாக்காய்க்கிடந்தன. அவற்றை ஆராய்ந்து பதர்களைந்து மணிகொள்வார் அரியராயினர். ‘தமிழ்ப் பாஷைச் சரித்திரம்’ என்பது தமிழிற் கலாநாயகப் பட்டப் பரீஷைப் பாடங்களுளொன்று, இதற்குத் தக்க நூல்கள் அகப்படாது மாணக்கர்கள் தவிப்பது கண்டிருக்கின்றோம். காலஞ்சென்ற தி. மி. சேஷகிரி சாஸ்திரியாரவர்களது ‘திரவிட சப்ததத்துவம்’ என்ற நூல் முன்னரே யேற்பட்டுள தமிழிலக்கணங்களைப் பாஷைநூ லமைதிகட்குத் தக்கபடி மாற்றிப் புத்திலக்கணமாக