பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

வகுத்ததொன்றாம், அது பொதுநோக்காய்ச் செல்லுதலின்றிச் சிறப்பு நோக்காய்ச் சொன்மரபுஞ் சொல்லிலக்கணமுமே கூறிச்சென்றது. ஆகவே யாம் மேற்கூறியவாறு ஒரு நூல் செய்ய விரும்பித் ‘தமிழ் மொழியின் வரலாறு’ என்னும் இந்நூலைப் புனைந்து வெளியிடுகின்றோம். இதன்கண்ணே, மேற்புல விஞ்ஞானிகள் கண்ட பாஷை நூன்முறைகளின்படி தமிழ் மொழியின் தன்மை இஃதென வருத்துக் கூறப்படுகின்றது.

யாம் எமது ஆங்கிலக் கல்வியின் பயனாகப் பழைய தமிழ் நூற்கருத்துக்கள் சிலவற்றொடு முரணிப் புதுக்கருத்துக்கள் சில ஆங்காங்குக் காட்டியிருத்தல் பற்றிப் பேரறிவாளர் எம்மை யிகழாது நூன்முழுவதும் உற்றுநோக்கி இஃது அமையும் அமையாதென இறுதியிற் கூறுக.

தமிழ் நூலிகளிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பன்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுமை குறையுமென்றெண்ணி ஆங்காங்கு வேண்டிய விடங்களில் இரண்டொருகாரணமே காட்டியிருக்கின்றோம். இன்னும் இந் நூலை விரிக்கும் அமயம் நேர்ந்துழி விரித்தெழுதுவாம், இஃது எழுதுமிடத்து எமது இயற்றமிழ் மாணவர் செய்தவுதவி யொருபொழுதும் மறக்கற்பாலதன்று.

“அறிவெனப் படுவது பேதையார் சொன்னோன் றல்” என்ற பெரியோர் வாக்கின்படி, அறிவுடையார் எம்மைப் பொறுத்தருளுவர் என்னும் துணிவுபற்றி இந்நூலை வெளியிடுகின்றேம்.


வி. கோ . சூ.