தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
111
நின்றும் இருந்தும் தரிசிக்கவும், பாராயண முதலியன புரியவும் ஏற்றதாய் அமைக்கத் திருவுளம் பற்றி யருளினார்கள். அவ்வாறே அதுவும் புதுப்பிக்கப் பெற்றது. திருப் பாதிரிப் புலியூர் ஸ்ரீபிரஹந்நாயகி ஸ்மேத ஸ்ரீபாடலேச்சுரப் பெருமான் கும்பாபிஷேக நாளாகிய 28-06-1917ல் கிரகப் பிரவேசம் செய்வித்தும், கும்பாபிஷேகத்திற்கென வந்த பல அன்பர்களைக் கொண்டு சொற்பொழிவு முதலாம் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவித்தும், சமூகநலப் பணிகள் புரிந்தார்கள்.
திருவெண்ணெய் நல்லூர்த் தொடர்பும் சங்கமும் : திருவெண்ணெய் நல்லூரில் தோன்றியவர் திரு. வடிவேல் முதலியார் அவர்கள். கல்வி பெறுவான் வேண்டிச் சுவாமிகளை அடுத்தவர். சுவாமிகள் திருப்பாதிரிப் புலியூர் வாணி விலாச சபை நடத்திக் கொண்டிருந்த காலத்திலும் சுவாமிகளிடமே தங்கியிருந்து உணவு முதலிய பெற்றுப் புலமை சான்றவர். பின்னாளில் திருக்கோவிலூர் ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர். திருவருட்டுறைப் புராணம் (திருவெண்ணெய் நல்லூர் பற்றியது). வாமன புராணம், (திருக் கோவலூர் திரு விக்கிரம சுவாமி பற்றியது) முதலிய நூல்களை இயற்றியவர்; சுவாமிகளால் வேலை கிடைக்கப் பெற்று ஒரே இடத்திற் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுற்றபின், உ.வே. சா. நூல் நிலையத்திலும் சில ஆண்டுகள் பணி புரிந்தவர். அவரது நன் முயற்சியால், திருவெண்ணெய் நல்லூர்த் தமிழ்ப் புலவர் - சுப்பிரமணிய முதலியார் தலைமையில் 'கம்பர் கலாமிர்த சங்கம்’ எனப் பெயரியதொரு சங்கத்தை நிறுவினர். அச்சங்கம், அவ்வூரை யடுத்துள்ள தடுத்தாட் கொண்டுர், சிறுமதுரை, கிராமம் என வழங்கும் திருமுண்டிச்சரம் முதலாய ஊர் மக்களுக்கு சமயப் பணிகள் ஆற்றியது. அதன் சிறப்பு விழாக்கள் சுவாமிகளின் தலைமையிலும், ஆதரவிலும் அவ்வப்போது நிகழும் . அச்சங்கம் 24-10-1909ல் தொடங்கப் பெற்றது.
இந்தச் சங்கமே யன்றி நல்லார் தொழும் வெண்ணெய் நல்லூர் என மெய்கண்ட நாதன் கூறக் காரணமாகி, அவர் உபதேசம் பெற்ற திருத்தல மாதலால் அவ்வப்போது சைவ மாநாடுகளும் சுவாமிகளின் தூண்டுதலின் பேரில் நடை பெறுவதுண்டு. 1929 ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்து நான்காமாண்டு விழாவும் அத்தலத்தில்