உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

123

கேட்ட அடிகளாரின் மாணவர் சிலர், நாமாவது ஒரு புதிய சங்கங்காண முயலலாமெனத் தனியேயமர்ந்து கூடிப்பேசி முடிவு செய்தனர். சுவாமிகளிடம் இச் செய்தியையறிவிக்காமலே சிலர் ஒன்று கூடித் திருவெண்ணெய் நல்லூர் சென்றனர். அப்போது அங்கு, மெய்கண்டார் மடத்தின் தலைவராக இருந்த நமசிவாயத் தம்பிரானின் ஆதரவோடு, அவர் தலைமையில் அகில இந்திய சைவ சிந்தாந்த மகா சமாசம்’ என்னும் பெயர் சூட்டி ஓர் சமாசத்தை நிறுவினர். அதில் பல தீர்மானங்களும் நிறைவேற்றப் பெற்றன. அவைகளை அடிகளார் செவிப்படின் மகிழ்ச்சி மிகக் கொள்வார்களென எண்ணினர் அம்மாணவர்.

திருவெண்ணெய் நல்லூர்ச் செய்திகள், செய்தித் தாள்களில் வெளிவந்தன. அடிகளார்க்கும் அறிவிக்கப் பெற்றன. அவர்கள் இச் செயலுக்கு ஆதரவளிக்கவில்லை, மாணவர்களை யழைத்து, முன்பே ஒரு சமாசம் இருக்கும் போது வேறொன்றுக்கு அவசியமில்லை. நாமே தோற்றுவித்த சங்கத்தைக் கைவிட்டு வேறொன்றைத் தோற்றுவித்து அதற்கு ஆதரவு தேடுதல் சிறப்பன்று; முன்னைய சமாசத்தின் நிலையை இச்சங்கம் அடைவதற்கு நீண்ட காலமாகாது; எனவே, புதிய சங்கத்தை வளர்க்கும் முயற்சியைக் கைவிட்டுப் பழைய சமாசத்தை வளர்ப்பதில் ஈடுபடுங்கள் என அறிவுரை கூறினார்.

மேலும், சென்னை சென்று, அங்கு அதன் வளர்ச்சிக்கு ஆக்கம் தேடுங்கள். அதற்குள், நம் நகரிலேயே வேண்டுமாயினும் ஒர் கூட்டம் நடத்திப் பிறருக்கு வழி காட்டுவோம் என்றும் அருளுரை கூறினர்.

மாணவர்களின் முயற்சியின் பயனாகச் சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் பத்தொன்பதாவது கூட்டத்தைத் திருப் பாதிரிப் புலியூரில் நடத்துவதெனச் சமாசம் முடிவு செய்தது. அப்போது செயலராக இருந்தவர் வழக்கறிஞர் ம. பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள். அவர் இளம் பருவத்தினர்; கடமைகளைச் சுறுசுறுப்போடு செய்யும் ஆர்வமும் ஆற்றலும் மிக்கவர் என்று அடிகளார் கேள்வியுற்று மகிழ்ந்தார்கள்.

1924ஆம் ஆண்டு டிசம்பரில் சமாசக் கூட்டம் திருப்பாதிரிப் புலியூரில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அடிகளாரே தலைவர்.

மூன்று நாள் நடைபெற்ற அவ் விழாவிற்கு வந்தோர் யாவர்க்கும், தீ, நா. முத்தைய செட்டியார்வர்கள் உணவளிக்கும் பொறுப்பினை ஏற்றார். சொ.தீ. நாகப்ப செட்டியாரவர்கள்