பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

151

எழுந்தருளிக் காட்சி நல்கும் தேவநாதப் பெருமா னுக்கு அணிவித்திருந்த நீண்ட பெரிய மாலையொன்றினை அடிகளாருக்கு அணிவித்துப் பாராட்டினர். அவர்களை நோக்கி, சுவாமிகள் 'இன்று நான் நெடுமாலையடைந்தேன்’ எனச் சிலேடையாகக் கூறி அனைவரையும் மேலும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தினார்கள்.

சுவாமிகள் திருப்பதிக்குப் பலமுறை எழுந்தருளியதுண்டு. 1934, 35-ஆம் ஆண்டுகளில் அங்கு ஆலயப் பொறுப்புத் தலைமையை வகித்தவர் திரு. சீத்தாராம ரெட்டியார். அவர் சிறு பருவத்தில் சுவாமிகளுடன் பயின்றவர். அவர் சுவாமிகளைச் சில நாள் எழுந்தருளவைத்துப் பல சேவைகளையும் செய்வித்து வைத்தார். அவர் வேண்டுகோளின் வண்ணம், ‘திருமலைச் சிறப்பு' என்ற சொற்பொழிவினைச் சுவாமிகள் ஆற்றினார்கள். அப்போது 'திரு' என்ற அடைமொழியையும், 'மலை' என்ற சொல்லையும் தனித்தனியாக விளக்கிவிட்டு ‘மலை நிலத் தெய்வமாம் முருகன்' பெருமைகளையும் விளக்கினார்கள். முருகன் செந்தி முதல்வன் என்று கூறியவுடன் அவனை இன்னார் மகனெனக் கூறாமல் 'மாயோன் மருகன்’ என்றுதான் நக்கீரர் பாடினார்; ஆதலால் அவனுக்கும் மாமனுக்கும் தொடர்பு மிகுதியாதல் பற்றி அவனை அவன் மாமனாகத் தொழும் இடம் ஈது என விளக்கினார்கள். அருணகிரிநாதர் திருமலையின்மீது அதிகப் பற்றுக் கொண்டவர். இங்கு பலநாள் இருந்திருப்பார் போலும். அதனால்தான் இன்றும் 14 பாட்டுகள் உள எனக் குறிப்பிட்டருளினார்கள். திருமாலின் பெருமைகள் பலவும் பேசி முடித்தார்கள்.

சுவாமிகள், தெய்வத் தொடர்பாகவே சொற்பெருக்காற்றுவதாயினும் தமிழ் மொழியின் ஏற்றம் பற்றிக் குறிப்பிட மறக்கவேமாட்டார்கள். தமிழிலக்கியங்களில் ஆங்காங்குக் காணப்பெறும் சொல்லினிமை பொருளினிமைகளைச் சுவை பட எடுத்துப் பேசுவதில் அவர்கட்கு இணையாவார் எவருமிலர். இங்ஙனம் பேசுவனவற்றிற் சில குறிப்பிடுவாம். தோத்திரங்களில்,

‘இல்லறத்தா னல்லேன் இயற்கைத் துறவியல்லேன் நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்துள்
ஒன்றேனு மல்லேன் உயர்த்திருப் போரூரா !
என்றேநான் ஈடேறு வேன்’

என்பது, சிதம்பர சுவாமிகளின் பாட்டு. இதனைச் சொற்பொழிவின் இறுதியில் வழிபடு தெய்வமீது பாடலாகப்