பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

167

நீராடித் தம் ஆன்மார்த்த பூசை முடித்துக் கொண்டு, வண்டிப்பாளையம், குருமூர்த்தி தோட்டத்திற் கெழுந்தருளித் தம் மடாலய முன்னோர்களை வழிபட்டுக் கொண்டு வந்து, மடாலயத்து எழுந்தருளும் ஸ்ரீ வல்லி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமண்ய மூர்த்திக்கு ஆராதனைகள் புரிந்து யாவர்க்கும் திருநீறளித்தனர்.

பிற்பகல், பேரவை கூடிற்று, வடமொழி- தென்மொழி வல்லுநராய மகாமகோபாத்தியாய, பண்டிதமணி- திருவாளர் மு. கதிரேசன் செட்டியாரவர்கள் அவைத் தலைவர். பேரறிஞர் பலர், சுவாமிகளின் தொண்டுகள், அறிவாற்றல்களைச் சிறப்பித்துப் பேசினர். பற்பல சங்கங்களிலிருந்தும், அறிஞர் பலரிடமிருந்தும் வந்திருந்த பாராட்டு வாழ்த்துரைகள் படித்தளிக்கப் பெற்றன. பேரவை முடிந்தவுடன், அறிஞர் யாவரும், மாணவரும் புடைசூழ்ந்துவர, சுவாமிகள் ஸ்ரீ பாடலேசப் பெருமானையும், பெரிநாயகித் தாயாரையும் வழிபட்டு அருளேற்று அன்பர்களுக்கும் பிரசாதம் வழங்கி ஆசிபுரிந்தருளினார்கள்.

கரந்தைத் தமிழ்ச்சங்க ஸ்தாபகரும், புரவலருமாகிய திரு. த. வே. -உமாமகேசுரம் பிள்ளை, B.A., B.L., அவர்களுக்குச் செந்தமிழ்ப் புரவலர் என்ற சிறப்புப் பெயரளித்தது அந்நாளில்தான். சிறுவர் கல்வியறிவு பெற்றுப் பின் வித்துவான் தேர்வுகட்குச்செல்ல வாய்ப்பாக இருக்குமாறு ஞானியார் கலாசாலை என்று ஓர் கல்வி நிலையத்தைத் தம் மடாலயத்தில் தொடங்குவதற்காகப் பத்தாயிர ரூபாய் வைப்பு நிதியாக அளித்தார்கள்.

பொன்விழா :

சுவாமிகள் பட்டம் ஏற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றன. 1939, நவம்பர் 18, 19 இரு நாட்கள் சுவாமிகள் பொன்விழா நடைபெற்றது. முன்போலவே மாணவர் சுவாமிகளிடம் அநுமதி பெற்றுத் திரு. K. சீதாராம் ரெட்டியாரவர்களைத் தலைவராகவும், டாக்டர் யு. வே. தேவராஜ முதலியார், கிழக்கு மருதூர் - தி. கி. நாராயண சாமி நாயுடு ஆகியோரைச் செயலர்களாகவுங் கொண்டதோர் குழு அமைக்கப் பெற்றது.

முதல் நாள், அவர்கள் பட்டமேற்ற 51-வது ஆண்டின் தொடக்க நாள். அந்நாளில் அதிகாலையிற் சுவாமிகள் நீராடிப் பூசை முடித்து மடாலயத்து முருகனுக்குத் தம் திருக்கரங்களாலேயே அபிடேக ஆராதனைகளைச் செய்தருளினார்கள்.