பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வல்லிக்கண்ணன்

தாகவே தோன்றும், சாஸ்திர ஆராய்ச்சி, சாஸ்திர உபதேசம், சிவ பூசை முதலிய சிறந்த செய்கைகளின் மயமாகவே அவர்களுடைய வாழ்க்கை இருந்து வந்திருக்கிறது. பிறரை இழித்துப் பேசுவதும், பிறர் யாது செய்கின்றார்கள் என ஒற்றாள் மூலமாய் ஒற்றியுணர்வதும், தம்மை யொப்பார் பிறரில்லை யென்னும் தருக் குணர்ச்சியும், தாம் விரும்பாதனவற்றைப் பிறர் செய்வாயின் அவர்களுக்கு நரகங்களைச் சிருட்டிக்கும் அமானுஷ்ய விருப்பமும், பொறாமையும், தம் பெருமையை நோக்க உலகம் தம்பாற் காட்டும் மதிப்பும் நன்றியறிவும் மிகச் சிறிதென் றெண்ணி அவ்வுலகத்தோடு தீராப் பகை கொண்டிருப்பதும் ஆகியவற்றையே சிறப் பியல்புகளாகக் கொண்டுள்ள பெரியோர்கள் வாழும் நமது நாட்டில், சுவாமிகளைப் போன்ற பெரியோர்கள் ஒரு சிலர் இருப்பது பாலைவனத்திற்குள் பசும் புல்லின் திடர் காணுவது போல்வதாகும்.

சுவாமிகளிடத்தில் பரசமய தூஷணை யென்பது இல்பொருளாகும். தாம் மேற்கொண்டுள்ள சாஸ்திரக் கருத்துக்களின் சிறப்புக்களைக் கூறி வருவார்களேயன்றி, அந்நிய சாஸ்திரக் கருத்துக்களை யெடுத்து அவற்றின் கண் குற்றங்களை ஆரோபித்து 'ஸ்வமத ஸ்தாபனம்’ என்னும் இயல்பு அவர்களிடத்து இல்லை. இதனால் அந்நிய சாஸ்திரங்கனை அவர்கள் கற்றறியாதவர்களென்றும் எண்ணுதல் தவறு. அவ்வகை சாஸ்திரங்களையும் நன்கு கற்றவர்களே யென்பது அவற்றின் கண் உள்ள நுட்ப விஷயங்களைக் குறித்து சுவாமிகளிடத்து விசாரிக்க லுற்றார் நன்கறிவர்.

சுவாமிகளது தெய்வபக்தி போலித்தன்மையுடையதன்று, உலகத்தை வஞ்சித்து, மதிப்புப் பெறல் வேண்டித் தெய்வ பக்தியுடையார் போல்நடிக்கும் வேஷதாரிகளை நாம் மிகுதியாகக் காணுகிறோம். இவ் வேஷதாரிகளுள் ஒருவரல்லர் சுவாமிகள் அவர்கள் பக்தி செய்யு முறையினாலே இது அறியலாகும். நிறை குடம் நீர் தளும்பல் உண்டோ? உடல் பொருளாவியை இறைவன் பால் ஒருங்கு சமர்ப்பிக்கும் பக்தி; இவ்வரிய தன்மைகளை யுடையதாகும் சுவாமிகளது பக்தி.

இறுதியாக நாம் கூறவேண்டுவது உலகிலுள்ள வுயிர்களுக்குச் சமயத்தொண்டு புரிவதே உண்மையான பக்தியென்று சுவாமிகள் கொண்டுள்ளமை. இச் சமயத் தொண்டுக்குப் பயன்படும் படியாகவே தமது சமய சாஸ்திர ஞானத்தையும்