பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

61


அன்பர்களின் விருப்பத்துக்கேற்றவாறு அவர்கள் பிரசங்கங்கள் அமைவது குறிப்பிடத்தக்கது. மாம்பலத்தில் பெரியார் இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புதிய வீடு கட்டிக் குடி போனார்கள். புது, வீட்டில் சுவாமிகள் திருக்கல்யாண காலட்சேபங்கள் நடத்தினால் குடும்பத்துக்கு மங்களமுண்டாகும் என்பது அவர்கள் கருத்தாயிருக்கலாம். இச் சந்தர்ப்பங்களில் சுவாமிகள் செய்த பிரசங்கங்கள் காமாட்சி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி திருக்கல்யாணம் என்பன.

சுவாமிகள் வீர சைவ சமயத்தின் ஆசாரியர். ஆனால் பிற சமயங்களையும் போற்றிப் பேசுவதே அவர் சுபாவம், அவர் பிரசங்கம் முழுமையும், சைவ சித்தாந்தப் பிரசங்கமாயிருக்கு மேயன்றி, தனியான வீரசைவம் அதில் தொனிக்காது. அப்படியே வைஷ்ணவர்கள் விருப்பத்திற்கிணங்கி, சீதா கல்யாணம், ஆண்டாள் போன்ற பிரசங்கங்கள் அவர் செய்ததுண்டு. ஒவ்வொன்றும் வைஷ்ணவ சமய மரபு வழுவாமல் பேசியது, கேட்பவர்கள் பெரிதும் அதிசயிக்கத் தக்கதாகவேயிருக்கும்.

சுவாமிகள் நடத்திய சமயப் பாட வகுப்புகள் சிறப்பானவை. அவர்கள் எழுமூரில் தங்கியிருந்தபொழுது, என்னோடொத்த சில நண்பர்களும் நானும் சேர்ந்து, சித்தாந்த சாத்திர பாடம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். “சைவ சித்தாந்த சமயக் கருத்து உணர்வதற்கு அடிப்படையான கருவிநூல்கள் சில. சிவஞான போதம், சித்தியார், சிவப்பிரகாசம் பயில்வதற்கு முன் பல அடிப்படைக் கருத்துக்கள் உங்களுக்குப் பழக்கமாயிருக்க வேண்டும். முப்பத்தாறு தத்துவங்கள். நன்றாய் விளங்க வேண்டும். இவற்றைக் கூறும் ஒரு நூல் உண்மை விளக்கம் என்ற சாத்திரம். இதை நீங்கள் பயில்வது அவசியம் என்று சொல்லி, ஒரு நல்ல நாளில் அதைத் தொடங்கினார்கள். தினம் இரண்டு அல்லது மூன்று வெண்பா வீதம் சுமார் பதினைந்து நாள் இந்நூல் பாடம் நடந்திருக்கலாம். காலையில் 7.30 முதல் 9.30 வரை பாடம் நடக்கும். இருந்த மாணாக்கர் சுமார் 20 பேர். எல்லோரும் சென்னையில் அலுவல் பார்த்தவர்கள். பாடங்கேட்டவர்களுக்கு, அச்சிறுநூற் பயிற்சியானது விரிந்து, சித்தாந்த சாத்திரப் பயிற்சிக்கு ஒரு முன்னுரையாக அமைந்திருந்தது. சைவ சித்தாந்தரீதியாகத் தத்துவங்கள் பற்றிய திட்டமான அறிவு எங்களுக்கு ஏற்பட்டது மாத்திரமல்லாமல், சைவ சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் அனைத்தையும் மேற்போக்காக ஒரளவு உணரும் அறிவும்