பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

வல்லிக்கண்ணன்

சில சத்திய வாக்குகளைக் கூறிக் குரு ஆணையை நிறைவேற்றுவதாகக் கூறுதல் மரபு. அந்த மடாலய வரன்முறை மரபையும், சந்நியாச நிலையையும் உறுதியுடன் கடைப்பிடித்துத் தம் முன்னோர் ஒழுகி வந்த முறைப்படி எந்தவிதக் குறைவும் நேராவண்ணம் ஆன்மார்த்த பூசை பரார்த்த பூசை முதலிய நியமங்களையும் வழுவாமற் காப்பதோடு மடாலய மரியாதைக்குரிய சிவிகையிவர்தல், பொது மக்கள் அன்புடன் புரியும் உபசாரங்களையேற்று அவர்கட்குத் திருவருள் பாலித்தல் முதலிய நெறிமுறை கடவாதொழுகுவதாகவும் குருவின்மீது ஆணை கூறிக் கூறல் வேண்டும் அங்ஙனம் யாவும் கூறி வந்த அடிகளார், தம் குருநாதரை வேண்டி ஒரே ஒன்றினை மட்டும் விலக்கியருள வேண்டிக் கொண்டனர். அதாவது : அவ்வப் போது சிகை மழிப்பித்துக் கொள்ளல் மாத்திரமே. எதனையும், தன் உறுதி மொழிப்படியே நிறைவேற்றி வந்தனர்.

மரபு ஒழுக்கம் பிறழாமை.

காலப்போக்கிற் கேற்பவும், சுற்றுச் சார்பிற்கேற்பவும் சில மரபு ஒழுக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டினார் சிலர். சிவிகையூர்ந்து செல்லலை விடுத்துக் கார் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அதனால், விரைவாகவும் எளிதாகவும் மக்களிடையே தொண்டாற்ற வாய்ப்புக் கிடைக்குமெனவும், ஒருக்கால், புதுவைக் கலைமகள் கழக ஆண்டு விழாவிற்குப் போந்திருந்த அடிகாளாரைத் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வேண்டிக் கொண்டார்கள். அப்போது, அடிகளார் புன்முறுவல் கொண்டு ஒர் கதை கூறினார்கள்; அஃதாவது:

சிறுகதை : ஓர் கால், வயோதிக மன்னன் ஒருவன் திறம்பட ஆட்சி நடத்தி வந்தான். அவன் மைந்தன், இந்தக் கிழவன் ஒழிந்தாலன்றோ நமக்கு ஆட்சி கிடைக்குமெனத் தன் உள்ளத்தில் எண்ணித் தந்தையை ஒழிக்கத் திட்ட மிட்டுக் கொண்டிருந்தான்.

அவ்வூரில் வனப்பு மிகுந்தவளாய், ஆடல் பாடல்களில் தேர்ந்த பொதுமகள் ஒருத்தி இருந்தாள். நெடுநாள் தவமியற்றி, உலகப் பற்றின் நீங்கிய சந்நியாசி ஒருவர் அப்பொதுமகளைக் கண்டார். மனம் மாறினார். தன் வேட்கையினை அப் பொதுமகளிடமும் துணிந்து கூறிவிட்டார். அவளும் அதற்கிணங்கி, அத் துறவிக்கு நாளொன்றைக் குறிப்பிட்டனள்.

அந்தக் குறிப்பிட்ட நாள் வருமுன்னர், கிழமன்னன் ஓர் இரவில்துக்கமின்றிப் புரண்டுபடுத்தும் பொழுது போகாமையால்,