பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதுரையின் மாண்பு

25

பாண்டியன் காலத்தில் மதுரைக்கு எழுந்தருளிச் சைவ சமயத்தை நிலைநாட்டினார் என்பர். கூன் பாண்டியனுக்கு மாதேவியாக வாய்த்த மங்கையர்க் கரசியாரும் மதியமைச்சராக வாய்த்த குலச்சிறையாரும் சைவம் காத்த தெய்வ மாண்பினராக மதுரைமாநகரில் விளங்கினர். அதனால் மன்னன், மாதேவி, மதியமைச்சர் ஆகிய மூவரும் பெரிய புராணம் போற்றும் அரிய சிவனடியார்களாகத் திகழ்கின்றனர்.

புலவரும் மதுரையும்

பழந்தமிழ்ப் புலவர் பலரும் தம் பெயருடன் மதுரையைச் சேர்த்து வழங்கப் பெரிதும் விரும்பினர். அவ்வாறு கூறப் பெறுவதைத் தங்கட்குப் பெருமையென்றும் கருதினர். மதுரைக் கணக்காயனர் மகனார் நக்கீரனார், மதுரைக் குமரனார், மதுரை மருதனிளநாகனார், மதுரைச் சீத்தலைச் சாத்தனார், மதுரைக் கண்ணகனார், மதுரையாசிரியர் கோடங் கொற்றனார், மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், மதுரை வேளாதத்தர், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரை நல்வெள்ளியார், மதுரைப் பெருங்கொல்லனார், மதுரைக் கதக்கண்ணனார் முதலிய புலவர் பெயர்களால் அவ்வுண்மையை அறியலாம்.

மதுரைத் திருக்கோவில்

மதுரையின் நடுநாயகமாய் மீனட்சியம்மையின் திருக்கோவில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி அணியணியாகத் தெருக்கள் அழகுற அமைந்துள்ளன. இங்கு எழுந்தருளிய இறைவனுக்குச் சொக்கநாதர், சோமசுந்தரர் என்னும் திருப்பெயர்கள் வழங்குகின்றன. அழகே வடிவாய்த் திரண்டவன் இறைவன்