பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்ந்த கதை

21


தெய்வக் கவிஞர் ஒருவர் தோன்றினார். அவர் முருகன் அருள்பெற்ற முத்தமிழ்க் கவிஞர் ; ஐந்தாண்டுப் பருவத்திலேயே அருந்தமிழ்க் கவிதை பாடிய பெருமான் ; குமரி முதல் இமயம் வரை சைவத்தையும் தெய்வத் தமிழையும் பரப்பிய பெருமான் ; கங்கைக் கரையில் தமிழ்க் கொடியை நாட்டிய தனிப்பெருங் கவிஞர். அவர் யார் தெரியுமா ? குமரகுருபரர் ! இந்த அமரகவிஞரை அறியாதார் யாா்?

இவரைப் போலவே நுாற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே நெல்லை நாட்டில் மற்றொரு தெய்வக் கவிஞர் தோன்றியருளினார். அவர் பாவநாசத்தையடுத்த விக்கிரம சிங்கபுரத்திலே அவதரித்தார். அவரும் ஐந்தாண்டுப் பருவத்திலேயே அழகிய கவிதை பாடிய அரும்புலவர். அவர் சிவஞான முனிவர். சைவசித்தாந்த சாத்திரங்களில் முதன்மை வாய்ந்த சிவஞானபோதத்திற்குச் சிற்றுரையும் பேருரையும் வரைந்தருளியவர் சிவஞான முனிவர். 'சிவஞான மாபாடினம்' என்று சைவர்கள் கொண்டாடும் பேருரையைத் தந்த பெருமை, அவரையே சாரும்.

இந்த இரு பெருந் தெய்வக்கவிஞர்களால் இரண்டு பெரிய மடாலயங்கள் மகிமையடைந்தன. குமரகுருபரரால் தருமையாதீனம் பெருமையுற்றது. சிவஞான முனிவரால் திருவாவடுதுறை வாதீனம் நிறைந்த பெருமையுற்றது. தருமையாதீனத்தின் பெருமைக்குக் காரணமான குமரகுருபரர் திருவருளால் திருப்பனந்தாள் ஆதீனம் ! தோன்றியது. இப்போது அத் திருப்பனந்தாள் ஆதீனம் தமிழும் சைவமும் தழைக்கப், புரியும் தொண்டைப் போற்றாதார் யார் ?