பக்கம்:தமிழ் விருந்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தமிழ் விருந்து பாரத நாட்டின் வடபாகத்தில் வழங்கும் பாஷைகள் ஆரிய வகுப்பைச் சேர்ந்தவை என்றும், தென் பாகத்தில் வழங்கும் மொழிகள் திராவிட வகுப்பைச் சேர்ந்தவை என்றும் மொழி நூற் புலவர்கள் கருதுகின்றார்கள் திராவிட வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் சிறந்த மொழிகள் இந்நான்கு மொழிகளுள் இன்று தமிழ் ஒன்றே ஆரியத்தின் உதவியின்றித் தனித்தியங்க வல்லதாய் இருக்கின்றது. மற்றைய மூன்று மொழிகளுக்கும் ஆரியத்தின் சார்பு அவசியமாய்விட்டது. இவ்வாறு நேர்ந்ததற்குக் காரணம் இலக்கணமே. தமிழொடு ஆரியம் கலக்கத் தொடங்கிய பழங்காலத்திலேயே தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் இலக்கண ஆசிரியர்கள். ஆரிய வெள்ளம் இலக்கண நூலோர் வகுத்த வாய் மடைகளின் வழியாகத் தமிழ் வயலில் பாய்ந்தது. மற்றைய திராவிட மொழிகளின் இலக்கணங்கள் ஆரியம் நன்கு விரவிய பின்னர் எழுதப்பட்டன. தெலுங்கு மொழியின் இலக்கணமாகிய 'ஆந்திர பாஷாபூஷணம்' எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டது; கன்னட இலக்கணமாகிய 'சப்தமணி தர்ப்பணம் எண்ணுறு ஆண்டுகளுக்குமுன் எழுந்தது. 'லீலாதிலகம்' என்னும் மலையாள இலக்கணம் வடமொழியிலே எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால், தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே எழுந்தது. ஆராய்ச்சியாளர் சிலர் அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பர். தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட இலக்கணம் ஒன்று அகத்திய முனிவரால் இயற்றப்பட்ட தென்று கர்ணபரம்பரை கூறுகின்றது. எனவே, தமிழ்