பக்கம்:தமிழ் விருந்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற்_கண்-அரசு 127 என்பர். இப்பொழுதும் மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்' என்ற வாசகம் வழங்கக் காணலாம். கரிகால் சோழன் காலத்தில் நிகழ்ந்த ஒரு வழக்கைக் குறித்துத் தமிழ்நாட்டில் நெடுங்காலமாக ஒரு கதை வழங்கி வருகின்றது. கரிகால் சோழன் இளமையிலேயே அரசனாய்விட்டான். அவனிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தார்கள் இரண்டு கிழவர்கள். வழக்கோ மிகச் சிக்கலானது. மன்றாட வந்த முதியோர் இருவரும் மனம் தளர்ந்து ஊரம்பலத்திலே இரவில் தங்கியிருந்தார்கள், வழக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளைஞனாகிய நம் அரசன் இவ் வழக்கை மனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டுமே ! முறை தவறாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டுமே ! எப்படியாகுமோ!' என்று உரையாடிக்கொண்டிருந் தார்கள். அப் பேச்சு, மாறுகோலம் புனைந்து அவ் வழியாக வந்த மன்னன் செவியில் விழுந்தது. கவலையோடு அரண்மனையை அடைந்தான் அரசன், மறுநாள் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது பெரிய அங்கியொன்றை அணிந்தான்; தலையில் அமைந்த கருமுடியை நரை முடியால் மறைத்தான்; இவ்வாறு முதுமைக் கோலம் புனைந்துகொண்டு நீதி மன்றத்திற் சென்று ஆசனத்தில் அமர்ந்தான். வழக்காளர் இருவரும் மன்றத்தில் புகுந்தார்கள், அரசன் திருமுகத்தை நோக்கினார்கள்; முகத்தில் இளமையிருப்பினும் அரசன் தலை முதிர்ந்திருக்கக் கண்டு ஆனந்தமடைந்தார்கள்: 'ஆண்டில் இளையவனாயினும் அறிவில் முதியவன் நம் அரசன்' என்று மனந்தேறித் தம் வழக்கை எடுத்துரைத்தார்கள். இருதிறத்தார் வாய் மொழியையும் அமைதியாகக் கேட்டுத் தீர்ப்புரைத்தான் அரசன்.