பக்கம்:தமிழ் விருந்து.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி 147 ஆன்றோர் போற்றினார்கள். தமிழ்நாட்டு மலையும் நதியும், மற்றைய இயற்கைப் பொருள்களும் அவர் தேவாரப்பாட்டிலே படமெடுத்துக் காட்டப்படுகின்றன. மந்தமாருதம் வந்துலாவும் திருக்குற்றால மலையில் வாழும் மந்திகளை அவர் பாட்டிலே காணலாம். 'பூவார் சோலை மயிலால, புரிந்து குயில்கள் இசைபாட, காமர் மாலை அருகசைய நடந்து செல்லும் காவேரி யாற்றின் அழகினை அவர் பாட்டிலே காணலாம்; இன்னும் கண்ணுக்கினிய நிறமும், காதுக்கினிய மொழியும் வாய்ந்த கிளியைக் காணலாம். சோலையிலே பறந்து திரியும் ஒரு பசுங் கிளியை நோக்கி, அவர் பேசும் முறையினைக் காண்போம் : " சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன், மொய்பவளத் தொடுதரளம் துறையாரும் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே!” என்ற தேவாரப் பாட்டில் தமிழ் மணமும் தெய்வ மணமும் கமழக் காணலாம். பறந்து வரும் பசுங்கிளியைப் பார்த்து, இளங் கிளியே, இங்கே வா; பாலும் தேனும் கலந்து உனக்குப் பருகத் தருவேன். நீ உனது இனிய மொழியால் எனது ஈசன் திருநாமத்தை ஒரு முறை பேசாயா, என்று திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார். இவ்வாறு சைவ வைணவப் பெரியார்கள் அருளிச் செய்த பாடல்களால் இயற்றமிழும் இசைத் தமிழும் ஏற்றமுற்றன. பண்ணின் திறம் உணர்ந்த பாணர்கள், அப் பாடல்களை இன்னிசைக் கருவிகளில் அமைத்துப் பாடினார்கள். பண்னொன்ற இசைபாடும் அடியார்கள்