பக்கம்:தமிழ் விருந்து.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - தமிழ் விருந்து தமிழ்நாட்டு மன்னர் போர் செய்யப் புறப்படும் போது நல்ல நாளும் பொழுதும் பார்ப்பது வழக்கம் அதனை ஆராய்ந்து சொல்வதற்குரிய அறிஞர்கள் எப்பொழுதும் அரசனைப் பிரியாமலிருப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் நற்பொழுதில் அரசன் தன் வாளையும் குடையையும் படையெடுக்கும் திசையில் பெயர்த்து வைப்பான். சோழ நாட்டையாண்ட கரிகால்வளவன் வடநாட்டின்மீது படையெடுக்கு முன்னமே நல்ல நாளும் பொழுதும் பார்த்து, வாளும் குடையும் வடதிசையில் பெயர்த்து வைத்தான் என்று சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது. தமிழ் வேந்தர், பகைவரது நாட்டின்மீது படை யெடுக்கும்பொழுது, சிறந்த பூமாலைகள் அணிந் திருப்பார்கள். நறுமணம் கமழ்கின்ற பூக்களை அணிந்து கொள்வதில் தமிழ் நாட்டாருக்கு என்றும் ஆசை அதிக மென்றே தோன்றுகின்றது. தமிழ் நாட்டு மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் வெவ்வேறு மாலைகளை அடையாள மாலையாக அணிந்திருந்தார்கள். சேர மன்னனுக்குப் பனந்தோட்டு மாலையும், பாண்டியனுக்கு வேப்பம்பூ மாலையும், சோழ மன்னனுக்கு ஆத்தி மாலையும் அடையாள மாலைகள் என்று அறிகின்றோம். போருக்குப் புறப்படும் பொழுது, மன்னர், அவ் வடையாள மாலை களைச் சிறப்பாக அணிந்திருப்பார்கள். இவ்வாறு அணிவதனால், படையெடுத்துவரும் மன்னர் இன்னா ரென்பதை மாற்றார் நன்கு அறிந்துகொள்வர். இந்த அடையாள மாலையோடு வேறு விதமான பூமாலை களும் படையெடுக்கும் அரசர்கள் அணிவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/18&oldid=878447" இலிருந்து மீள்விக்கப்பட்டது