பக்கம்:தமிழ் விருந்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராதனப் போர் - படையெடுப்பு 17 பகையரசன் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் கருத்தோடு படையெடுக்கும் அரசன் குறிஞ்சிப்பூ மாலை சூடியிருப்பான். மாற்றரசன் கோட்டையை வளைத்து முற்றுகை செய்யக் கருதிப் படையெடுக்கும் மன்னவன் உழிஞை மாலை அணிந்திருப்பான். வீரப்புகழை விரும்பிப் பிற மன்னர்மீது படையெடுக்கும் அரசன் தும்பைப்பூ மாலை தரித்திருப்பான். ஆகவே, மன்னர்கள் அணிந்திருக்கும் மாலைகளைக் கண்டு, அவர் மனத்திலமைந்த கருத்தை மாற்றரசர் நன்றாகத் தெரிந்துகொள்வார்கள். போர்க்களத்தில் வெற்றி பெறுகின்ற வேந்தர்கள் வாகை மாலை சூடுதல் வழக்கம். பகைவர் நாட்டின்மீது போர் தொடுக்கக் கருதும் அரசன் அதற்கு அறிகுறியாக அந்நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்ந்து தன் நாட்டிற்குக் கொண்டு வருவான். அதற்கு, ஆநிரை கவர்தல்' என்று பெயர். பசுக்களைக் கவரச் செல்லும் மறவர் செக்கச் சிவந்த வெட்சிமாலை சூடியிருப்பார்கள்; இருட்டிலே சகுனம் பார்த்துச் சென்று பசுக்களைக் கவர்ந்து வருவார்கள். அப் பசுக்களுக்குரிய அரசன் அவற்றை மீட்பதற்குப் படையெடுத்து வரும்போது, இருதிறத்தார்க்கும் போர் நிகழும். இவ்வாறு பசுக்களைக் கவர்வதன் கருத்து யாது என்பதைச் சிறிது ஆராய்வோம். பசுக்களுக்குத் தீங்கு செய்யும் நோக்கம் மன்னர் மனத்திலிருந்ததாகத் தெரியவில்லை; கவர்ந்து வந்த பசுக்களை அவர் நன்கு பாதுகாத்ததாகவும் தெரிகின்றது. தொன்று தொட்டுத் தமிழ்நாட்டார் பசுக்களை மிக அன்புடன் போற்றி வந்துள்ளார்கள். மணிமேகலை என்னும் தமிழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/19&oldid=878449" இலிருந்து மீள்விக்கப்பட்டது