பக்கம்:தமிழ் விருந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ் விருந்து சென்றிருந்த வீரன் ஒருவன் திரும்பிவரக் காணாத அவன் தாய் இருட்டிலே மகனைத் தேடப் புறப்பட்டாள் போர்க்களத்தில் கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தாள், நெடுநேரம் தேடித் திரிந்து தன் மகனைக் கண்டாள். அவன் கொடுங் காயமடைந்து குற்றுயிராய்க் கிடந்தான். உயிரோடு தன் மகனைக் காணும் பேறு பெற்ற வீரத்தாய் மனங் குளிர்ந்து அவனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினாள். அப்போது அவ்வீரன், "தாயே! என்னை எடுத்துச் செல்வதனால் யாது பயன்? நம் படைத் தலைவராகிய ஊமைத்துரை, அதோ குற்றுயிராய்க் கிடக்கின்றார். அவரை எடுத்துக்கொண்டு போ. அவர் பிழைத்தால் நம் எல்லோருக்கும் நலமாகும்" என்று உருக்கமாக வேண்டினான். அவ் வுரை கேட்ட தாய் மனம் உருகினாள்; தன் மகனது அரும் பெரும் தியாகத்தை மெச்சினாள்; அவன் விரும்பியவாறே ஊமைத்துரையைக் கண்டு எடுத்துச் சென்று காப்பாற்றினாள். தனக்கென வந்த தண்ணீரைத் தன்னிலும் தாக முடைய ஒரு போர் வீரனுக்கு அளித்து அழியாப் புகழ் பெற்றான் ஒர் ஆங்கிலவீரன். அவ்வண்ணமே, தன்னுயிர் காக்க வந்த தாயைத் தலைவனிடம் அனுப்பி, அவனுயிரைக் காத்து, தன்னுயிர் துறந்த தமிழ்வீரன் தியாகமும் வியக்கத் தக்கதன்றோ? இத்தகைய வீரரைப் போற்றாதார் யாரே? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/28&oldid=878468" இலிருந்து மீள்விக்கப்பட்டது