பக்கம்:தமிழ் விருந்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையும் வைராக்கியமும் 4; இனி, சிவத் தொண்டர்களில் ஒருவராகிய திருநாவுக்கரசர் கொண்ட வைராக்கியத்தைச் சிறிது பார்ப்போம். தமிழ் நாட்டிலுள்ள சிவப்பதிகளை யெல்லாம் கண்டு வணங்கிய திருநாவுக்கரசர், கைலாச மலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோலத்தைக் காண ஆசைப்பட்டார். எழுபது வயதிற்கு மேற்பட்ட முதுமைப் பருவத்தில் வடதிசையை நோக்கி நடந்தார்; காசியை அடைந்து கங்கையையும் விசுவநாதரையும் கைதொழுதார்; வெள்ளி மாமலையை நோக்கி உள்ளம் மகிழ்ந்து நடந்தார்; இரவு பகலாக ஊண் உறக்கமின்றி நடந்து நடந்து, கால் இரண்டும் தேய்ந்தார் கைகளால் நடக்கத் தொடங்கினார். கையும் தேய்ந்தார்; உடம்பினால் உருண்டு உருண்டு சென்றார்; உடம்பும் தேய்ந்தார்; நகர்வதற்கு முடியாமல் வழியிலே தங்கினார். அப்போது அவ் வழியாக முனிவர் ஒருவர் வந்தார்; திருநாவுக்கரசரைக் கண்டு இரக்கங் கொண்டு, 'நீர் இங்கே எதற்காக வந்தீர்?' என்றார். 'முனிவரே ! கைலாசநாதனைக் கண்டு கும்பிடும் காதலால் வந்தேன்' என்று திருநாவுக்கரசர் மறுமொழி தந்தார். அது கேட்ட முனிவர், 'கைலாச மலையாவது, நீர் காண்பதாவது; வானவரும் காணமுடியாத அம்மலையை மானுடராகிய நீரோ காணவல்லீர்? வந்த வழியே சென்று சொந்த ஊரைச் சேரும்' என்றார். முனிவர் சொன்ன சொற்களால் நாவுக்கரசர் சிறிதும் மனம் தளரவில்லை; தம் மனவுறுதியைத் திறமாக எடுத்துரைத்தார். "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண்ட ல்லால் மாளும் இவ்வுடல் கொண்டுமீ ளேன்என மறுத்தார்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/43&oldid=878499" இலிருந்து மீள்விக்கப்பட்டது