பக்கம்:தமிழ் விருந்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ் விருந்து முனிவராக வந்த சிவபெருமான் திருநாவுக்கரசரது வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து, 'கைலாசக் கோலத்தைக் காட்டியருளினார்' என்று பெரிய புராணம் கூறுகின்றது. சமய வைராக்கியம் போலவே சமுதாய வைராக்கியமும் உண்டு. தாழ்ந்தோரை உயர்த்துவோம் என்றும், தாய்மொழிக்குத் தொண்டு செய்வோம் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்றும் உறுதி கொண்டவர்கள் உயர்ந்தவர் களல்லரோ? இத் தகைய வைராக்கியம் பூண்டவர்கள் பிறர் தூற்றினால் வருந்த மாட்டார்கள் போற்றினால் மகிழவும் மாட்டார்கள். நயத்தினாலேனும் பயத்தினா லேனும் அவர் மன உறுதியை மாற்ற முடியாது. அவர்களே நினைத்ததை முடிக்கும் நீர்மையாளர் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்பது திருக்குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/44&oldid=878501" இலிருந்து மீள்விக்கப்பட்டது