பக்கம்:தமிழ் விருந்து.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ் விருந்து கருணைக்குக் கங்கு கரையில்லை. அவன் நாவில், 'இல்லை' என்ற சொல்லே இல்லை. காட்டிலே குழைந்து கிடந்த முல்லைக்கொடி யொன்றைக் கண்டு. மனமிரங்கி, அது படர்ந்து தழைத்தற்காகத் தன் அழகிய தேரை அதன் அருகே விட்டுச் சென்ற பாரியின் மனப்பான்மையைத் தமிழுலகம் வியந்து மகிழ்ந்தது. பயன் கருதாது கொடுத்த பாரியின் பெருமையைப் பொய்யறியாக் கபிலர் புகழ்ந்து போற்றினார். "பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் - மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே" என்று பாடினார் கபிலர். 'செந்தமிழ்ப் புலவ ரெல்லாம் பாரி ஒருவனையே மாறி மாறிப் புகழ்கின்றனரே ! இவ்வுலகத்தைக் காப்பவன் பாரி ஒருவன்தானா? மழையும் உலகத்தைக் காக்கின்றதன்றோ என்று கபிலர் பழிப்பார் போலப் பாரியின் பெருமையைப் பாராட்டினார். இம் மண்ணுலகில் பாரிக்கு ஒப்பாகச் சொல்லத் தக்கார் யாருமில்லை; விண்ணினின்று கைம்மாறு கருதாது பொழியும் மாரியே அவனுக்கு இணையாகும் என்பது கபிலர் கருத்து. இங்ங்னம் கொடைத் திறத்தால் புகழ் பெற்ற பாரியைத் தேவாரமும் பாராட்டுவதாயிற்று. 'கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை" என்று முறையிடுகின்றார் சுந்தரமூர்த்தி. பொதியமலைத் தலைவனாய் விளங்கிய ஆய் என்பவன் மற்றொரு வள்ளல். வறுமையால் வாடி வந்தடைந்தோரைத் தாயினும் சாலப் பரிந்து ஆதரித்த ஆயின் பெருமையைப் புறநானூற்றால் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/50&oldid=878515" இலிருந்து மீள்விக்கப்பட்டது