பக்கம்:தமிழ் விருந்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நளவெண்பா நளன் கதை நாடறிந்த பழங்கதை. வடமொழியில் உள்ள பாரதத்திலும், தமிழ் மொழியில் உள்ள சிலப்பதிகாரத்திலும் நளன் கதை குறிப்பிடப்படு கின்றதென்றால் அதன் தொன்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?"பஞ்ச பாண்டவருள் தலை சிறந்த தருமர் சூதாடி, நாடிழந்து, வனவாசம் செய்தபோது அவரைக் காணப்போந்தார் வியாச முனிவர். மெய்யன்புடைய முனிவரைக் கண்ட தருமர் மனம் வருந்தி, 'ஐயனே ! மதியிழந்து மாயச் சூதாடினேன்; நாடும் பீடும் இழந்தேன்; காடு போந்தேன்; கடுந்துயர் உழந்தேன்; என்னைப்போல் துன்புற்றோர் இவ் வுலகில் உண்டோ ! என்று கண்ணிர் வடித்தார். அது கேட்ட முனிவர், தருமர் மனத்தைத் தேற்றக் கருதி, நளன் கதையை எடுத்துரைத்தார். கலியின் கொடுமையால் மதியிழந்து சூதாடி, நாடும் செல்வமும் இழந்து, கானகம் சென்று காதல் மனையாளைப் பிரிந்து கடுந்துயர் அடைந்த நளன் கதையைக் கேட்ட தருமர் ஒருவாறு மனந்தேறினார்" என்று மகாபாரதம் கூறுகின்றது. செந்தமிழ்ப் பழங்காவியமாகிய சிலப்பதிகாரமும் நளன் கதையைக் குறிக்கின்றது. சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தில், வளமார்ந்த வணிகர் குடியிலே பிறந்த கோவலன், பொதுமாதின் வசப்பட்டுப் பொருளெல்லாம் இழந்தான்; பெருமை சான்ற வீட்டையும் நாட்டையும் விட்டு, கற்பிற் சிறந்த மனையாளோடு மதுரை மாநகரை நோக்கிப் புறப்பட்டான். வழிநடந்து சென்ற இருவருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/63&oldid=878543" இலிருந்து மீள்விக்கப்பட்டது