பக்கம்:தமிழ் விருந்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழ் விருந்து என்று காதலியைப் பிரியும் தறுவாயில் நளன் கானகத் தெய்வங்களை வணங்கிக் கூறும் மொழிகள் நம் உள்ளத்தை உருக்குவனவாகும். விடியற்காலத்தில் விழித்தெழுந்தாள் தமயந்தி, காதலனைக் காணாது கலங்கினாள் மயங்கினாள்; கண்ணிர் பெருக்கினாள். அவ் வழியாக வந்த வணிகன் ஒருவன் கருணை கூர்ந்து, மாதே, நீ யார்? இக்கடுங் கானகத்தில் தன்னந் தனியாய் எவ்வாறு வந்தாய்? என்று வினவினான். அதற்குத் தமயந்தி கூறும் மறு மொழி கற்பிற் சிறந்த குலமாதர் ஒழுக்கத்தை விளக்குகின்றது. "முன்னை வினையின் வலியால் முடிமன்னன் என்னைப் பிரிய இருங்கானில்-அன்னவனைக் காணாது அழுகின்றேன் என்றாள் கதிர்இமைக்கும் பூணாரம் பூண்டாள் புலர்ந்து" கானகத்தில் கதறவிட்டுச் சென்ற கணவன்மீது தமயந்தி குற்றம் குறை யொன்றும் சொல்லவில்லை. முன்னை வினையின் கொடுமையை நினைந்து வருந்துவாள் ஆயினாள். 'கண்டார் வெறுப்பனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானைக் குறை கூறாது தம் தீவினையை நொந்து கொள்வது பண்டைக் குலமாதர் கற்புமுறை என்பது தமயந்தியின் வாய்மொழியால் இனிது விளங்குகின்றது. அவ் வுரை கேட்ட வணிகன் மனங் குழைந்து மங்கையை அழைத்துச் சென்று, அண்மையில் இருந்த ஒரு நாட்டிலே சேர்த்தான் அந் நாட்டரசன் அவளைத் தமயந்தி என்று அறிந்தவுடன் விதர்ப்ப மன்னனிடம் சேர்ப்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/66&oldid=878549" இலிருந்து மீள்விக்கப்பட்டது