பக்கம்:தமிழ் விருந்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ் விருந்து இவ்வுலகில் செம்மனம் வாய்ந்தவர் சுகத்தையும் துக்கத்தையும், செல்வத்தையும் வறுமையையும் சமமாகவே கருதுவர். மட்டற்ற செல்வம் வந்தடைந் தால் மகிழ்ந்திடவும் மாட்டார்; அடுத்தடுத்துத் துன்பம் வந்தால் அழுங்கிடவும் மாட்டார். இத் தகைய மனப்பான்மை இராமனிடத்தில் அமைந்திருந்ததாகக் கம்பர் காட்டுகின்றார். நாட்டின் தலைவனாக வீற்றிருந்து அரசாளும் பதவியைத் தந்தை அளித்த போதும், காட்டில் அலைந்து திரியும் கடமையைத் தாய் விதித்த போதும் இராமன் திருமுகம் சித்திரத்தில் எழுதிய செந்தாமரையை ஒத்திருந்தது என்னும் உன்மையை, "மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும் இத்தி ருத்துறந் தேகென்ற போதினும் சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை ஒத்தி ருந்தமு கத்தினை உன்னுவாள்" என்று சீதையின் வாயிலாகக் கம்பர் உணர்த்துகின்றார். பஞ்சபாண்டவருள் தருமர் அத் தன்மை வாய்ந்தவர் என்று நளவெண்பா கூறுகின்றது. "மெய்த்திரு வந்துற் றாலும் வெந்துயர் வந்துற் றாலும் ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே" என்று வியாச முனிவர் வாயிலாகப் புகழேந்திப் புலவர் தருமரைப் பாராட்டுகின்றார். இரு கவிகளின் சொல்லும் பொருளும் ஒன்றுபட்டிருக்கக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/70&oldid=878559" இலிருந்து மீள்விக்கப்பட்டது