பக்கம்:தமிழ் விருந்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழ் விருந்து னேக்கு என்றும், உனக்கு என்பதை னோக்கு என்றும் வழங்கக் காண்கின்றோம். இத் தகைய மாற்றமடைந்த சொற்களைத் தெலுங்கிலே காணலாம். அவனுக்கு என்பது வானிக்கி என்றும், அதனுக்கு என்பது தானிக்கி என்றும் தெலுங்கில் வழங்கும். இன்னும் இரண்டொரு பெயர்ச் சொற்களைப் பார்ப்போம் : அதர் என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல். வழிஎன்பது அச் சொல்லின் பொருள். காற்று வருவதற்காக வீட்டில் அமைக்கும் ஜன்னலுக்குக் காலதர் என்று பண்டைத் தமிழர்கள் பெயரிட்டார்கள். ஜன்னல் என்பது தமிழ்ச் சொல்லன்று; போர்ச்சுகீசியப் பதம் போர்ச்சுகீசியர் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு முன், நம் வீட்டுச் சன்னலுக்கு ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமன்றோ? அப் பெயர்தான் காலதர், கால் என்றால் காற்று; அதர் என்றால் வழி. காலதர் என்றால் காற்று வரும் வழி. இக் காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாத அதர் என்ற சொல்லைத் திருக்குறள் முதலிய பல பழைய நூல்களிற் காணலாம். "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை” என்றார் திருவள்ளுவர். ஊக்கத்தைக் கைவிடாமல் உழைப்பவனிடம் ஆக்கம் வழிகேட்டுச் சென்றடையும் என்பது இக்குறளின் கருத்து. இவ்வாறே நூல்களிலே எடுத்தாளப்பட்டிருக்கின்ற அதர் என்னும் சொல், தெலுங்கில் தாரி என்று வழங்குகின்றது. இவ் வண்ணமே உரல் என்பது ரோலு என்றும், இலது என்பது லேது என்றும், இறப்பு என்பது ரேப்பு என்றும் வழங்கக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/94&oldid=878608" இலிருந்து மீள்விக்கப்பட்டது