பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றை யன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும் பயன்படுவது; ஆகையால் மிகவும் அருமையாகவே காணப்படும். மேலே சொன்ன நான்கு வகைப் பாக்களும் பழங் கால முதல் இன்றுவரை வழங்கி வருகின்றன.

ஆனால் பழங் காலத்தில் வழங்கி வந்த வேறு ஒருவகைப் பாடல் பிற்காலத்தில் வழக்கில் இல்லாமல் போய்விட்டது. முதற் சங்க காலத்தில் அவ்வகையான பாடல்கள் மிகுதியாக இருந்தனவாம். பரிபாடல் என்ற பெயருடைய அப்பாடலுக்குரிய இலக்கணம் தொல்காப்பியத்தில் இருக்கிறது. 'எத்துணையோ பரிபாடல் முதற் சங்க காலத்தில் இருந்தன" என்று இறையனர் அகப்பொருள் உரையாசிரியர் கூறுவர் (1, உரை.) இடைச் சங்க காலத்திலும் பல பரிபாடல்களைப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இடைச் சங்கத்துக்கு இலக்கணமாக வழங்கிய தொல்காப்பியத்தில் பரிபாடலுக்குரிய இலக்கணம் இருப்பதால், இலக்கியமும் இருந்தது என்று தெரிகிறது. கடைச் சங்க காலத்தில் தொகுக்கப் பெற்ற எட்டுத் தொகை நூல்களில் எழுபது பரிபாடல்கள் அடங்கிய தொகுதியும் ஒன்று. அதற்குப் பரிபாடல் என்பதே பெயர். கடைச் சங்க காலத்துக்கு அப்பால் பரிபாடலைப் பாடுபவர்களே இல்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பாப்பாவினம் என்ற நூலில் மாத்திரம் ஐந்து பரிபாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாவுக்கும் பாவினத்துக்கும் உதாரணமாகச் செய்யுட்களைப் பாடி அமைத்த நூல் அது. ஆதலின் வழக்கற்றனவானாலும் மாதிரிக்காக ஐந்து பரிபாடல்களைப் பாடிச் சேர்த்திருக்கிறார், அதன் ஆசிரியர். அவற்றோடுள்ள குறிப்புகளில் பரிபாடலின்