உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

150 எங்கே அந்த எழில் மங்கை? முத்துப் பல்லினாள் எங்கே? துடியிடை எவ்விடம் உள்ளாள்? கனகவல்லி எங்கே? மதி முகவதி எவ்விடம் இருக்கக் காண்கிறீர்? பூ இதழா, பொன் மேனியா, அறிவை மயக்கும் பருவத்தாள் என்கிறீரே, அவ ளைக் காணாமுன்பே அறிவு மயக்க மேலிடுகிறதே, எங்கே உள்ளனள் அந்த ஆரணங்கு? அவள் என் நெஞ்சைச் சூறையாடுவது இருக்கட்டும், புலவரீர்! உமது கவிதை என் நெஞ்சைச் சிதறடிக்கிறதே, எங்கே அந்தச்சிற்றிடை, கூறுக,என்றுகேட்டிடத்தோன்றும், குற்றாலக் குறவஞ்சி படிக்கும்போது. நான் அந்த மாளிகைக் கூடத்திலே அமர்ந்து குறவஞ்சியைப் படித்தபோது, தம்பி, கவி தீட்டிக் காட்டிய அந்த பெண் பாவையை அல்ல, நமது திரு இடத்தைத்தான் எண்ணிக்கொண்டேன் அத்துணை எழில் நிரம்பிய நாடு. ஆயின், என்ன நிலை இன்று என்று எண்ணும்போது, இன்று திருவிடம் இருக்கும் நிலையினைப் படம் பிடித்தளிக்க ஓர் புலவர் முன்வரக்கூடாதா என்றுகூட எண்ணினேன். குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் தீட்டியது, வசந்தவல்லி எனும் கற்பனைக் காரிகைப் பற்றி! அந்தக் காரிகை, குற்றால நாதருக்குக் காணிக்கையாகிவிடுவது, நூலின் பொருள். வசந்தவல்லிபோன்றே கண்டோரை கவர்ச்சி கொள்ளச் செய்யும் எழில் ததும்பும் நம்நாடு, இன்று வடவருக்கல்லவா கால் வருடக் காண்கிறோம். வசந்தவல்லி வருகிறாள், பந்தாடி மகிழ்கிறாள், குற்றால நாதரின் கோலம் கண்டு காதல்கொள்ளுகிறாள், குறத்தி வரு கிறாள், குறி சொல்கிறாள், நாதனைத் தேடிப் பெற்றுக் கூடி மகிழ்கிறாள், என்று நூல் எடுத்தியம்புகிறது. அங்ஙனம் இருத்தலுக்குப் பதிலாக, இத்துணை அழகு ததும்பும் வசந்தவல்லி வந்தாள், பந்தாடி நின்றாள், அவளை ஓர் மலைப் பாம்பு விழுங்கிற்று. இடைவரை உள்ளே, மற்றப் பகுதி மேலே, அவள் அலறுகிறாள், துடிக்கிறாள், அது கேட்டு ஓடிவந்தவர்கள் மலைப் பாம்பின் அழகு கண்டு மயங்கி நின்ற னர், மங்கை நல்லாளின், கண்களிலே நீர் ததும்பிற்று, அவர் களோ, மலைப்பாம்பு, மெள்ள மெள்ள அவளை உள்ளுக்குக் கொண்டு செல்லும் திறத்தினைக் கண்டு வியந்தனர், என்று நூல் இருந்திருக்குமேல், எவ்வளவு வேதனை கொள்வோம்: தம்பி, தாயகத்தின் இன்றைய நிலை அங்ஙனமன்றோ இருக் கிறது. என் செய்வோம், திரு இடத்தின் எழிலை எங்கு நோக்கினும் காண்கிறோம், காணுந்தோறும் காணுந்தோறும், இத்துணை எழில்மிக்க நாடு, அடிமைப்பட்டுக் கிடக்கிறதே என்ற எண்ணமன்றே மேவிடுகிறது. அடிமையின் கரத்திலே