94
பிரதம நீதிபதியாக இருந்தவரே காங்கிரஸ் ஆட்சியினரின் குட்டுகளை இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்குகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ முடுக்குடன் பேசுகிறார்கள், எம்மைக் குறைகூற என்ன இருக்கிறது? எவருக்கு இருக்கிறது அந்தத் தகுதி? என்று. தகுதி மிக்கவரும், வேதனை தாளாமல், மனத்திலுள்ளதைக் கொட்டிவிட்டார். இனியேனும் காங்கிரஸ் தலைவர்கள், சிறிதளவு அடக்க உணர்ச்சி காட்டுவார்களா?
இவர் ஒருசமயம் காங்கிரசுக்குப் பகைவரோ, பிடிக்காதோ காங்கிரஸ் தலைவர்களை என்று எவரும் எண்ணத்தேவையில்லை, தம்பி! அவருடைய கட்டுரையில் துவக்கத்திலேயே, நேருபண்டிதரையும் இன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜரையும் பாராட்டியிருக்கிறார்.
ஆகவே அவருடைய பலத்த கண்டனத்துக்குக் காரணம், வெறுப்பு அல்ல, பொச்சரிப்பு அல்ல, கட்சி மாச்சரியம் அல்ல, பதவி பிடிக்கும் நோக்கம் அல்ல, உள்ளத்தில் தோன்றியதை அச்சம் தயை தாட்சணியமின்றிக் கூறியிருக்கிறார்.
என்னென்ன இன்னலை ஏற்றுக்கொள்கிறார்கள் இந்தத் தூயவர்கள் என்று நாட்டின் நல்லவர்கள், காங்கிரசாரைப் பாராட்டிய காலத்தோடு,
என்னென்ன ஊழல் இவர்கள் ஆட்சியில், பதவி பெற என்னென்ன தந்திரம் செய்கிறார்கள், எவரெவரிடமிருந்து எத்தனை எத்தனை பணம் பெறுகிறார்கள், பெற்ற பணத்துக்காக என்னென்ன சலுகைகளைக் காட்டுகிறார்கள் முதலாளிகளுக்கு, சலுகைகளைப் பெற்றுக் கொண்டு அந்த முதலாளிகள் என்னென்ன விதமான முந்திரா வேலைகளைச் செய்கிறார்கள், ஊழலை வளரச்செய்துவிட்டு, சொந்த நலனைப் பெருக்கிக் கொண்டு சொகுசாக வாழ்கிறார்களே, இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்று பரவலாக எங்கும் பேசப்படும் இந்தக் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சே! நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாமா என்று தோன்றும் நல்ல காங்கிரஸ்காரர் அனைவருக்கும். ஆனால், தம்பி! அவர்கள், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் நம்முடைய நாவினை அல்லவா வெட்டிவிடத் திட்டமிடுகிறார்கள்.