இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
95
எனக்கு ஒரு மகிழ்ச்சி தம்பி! காங்கிரசார் கையாளும் கேடான முறைகளை, அரசியல்வாதிகள் கண்டிப்பதுடன் முடிந்துவிடவில்லை, அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவாளரும் கண்டிக்க முன்வந்து விட்டார்கள்; அவர்கள் பேச்சு, மக்களிடையே தெளிவை நிச்சயம் உண்டாக்கும்.
நாம் இதுகாறும் கூறிக்கொண்டு வந்தவைகளை, நாட்டிலே மிகத் தூய்மையான துறையில் மிகப்பெரிய நிலையிலே இருந்து வந்தவரும் கூறுகிறார், நம்மைவிடத் திட்டவட்டமாக என்பதைக் காணும்போது, நாம் நடாத்தி வரும் பணி நியாயமானது, தேவையானது, தூய்மையானது என்பதிலே மேலும் நம்பிக்கை வளரத்தான் செய்கிறது. எனவே நமது பணி தொடர்ந்து நடைபெற ஆர்வம் அதிகமாகிறது.
காந்திமகான் சீடர் இவர் கன தனவான்களுடன் கூடி, நாடு ஆளும் ஆசையினால் நச்சரவை வளர்க்கின்றார், அரவு அது தீண்டுவதால் துடிக்கின்றார் ஏழையரும், துயர் துடைத்துத் தூய்மைகாணத் தொடர்ந்து நடத்திடுவோம் நமது பணி.
என்று கூறிடத் தோன்றுகிறது. உனக்கு என்ன தோன்றுகிறது, தம்பி!
23-8-64
அண்ணன்,
அண்ணாதுரை